வாகனேரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் விளக்கமறியல்

மட்டக்களப்பு- வாகனேரி, குளத்துமடு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட 9 பேரையும் எதிர்வரும் 11 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த 9 சந்தேகநபர்களையும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை மாலை, வாகனேரி- குளத்துமடு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மண் ஏற்றி வந்த  இரண்டு உழவு இயந்திரத்தை வகுளாவலை சந்தியில் வைத்து, பொதுமக்கள் வழிமறித்து மண்ணை பறிமுதல் செய்ய முயன்றனர்.

இதன்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில், உழவு இயந்திரத்தில் வந்தவர்களாலும் மேலும் சிலர் ஒன்றிணைந்தும் பொதுமக்கள் மீது தாக்குல் மேற்கொண்டனர். இதில் 11 பேர் காயமடைந்ததுடன் இரண்டு ஆண்கள், ஒரு பெண் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன் இராணுவத்தினர் பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், எஸ்.யோகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதாக தெரிவித்தனர்

இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு, தலை மறைவாகியிருந்த 9 பேரையும் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பொலிஸார் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்தவர்களை நேற்று,  வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தியப்போது, அவர்களை எதிர்வரும் 11 திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை வாகனேரி பகுதியில் ஓட்டமாவடி காவத்த முனையை சேர்ந்தவர்களினால் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக பிரதேச மக்களினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளதுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.