கொவிட்-19 சோதனை- தடமறிதல் சேவை வேல்ஸில் நடைமுறைக்கு வருகின்றது!

முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்த உதவும் வகையில் கொவிட்-19 சோதனை மற்றும் தடமறிதல் சேவை, வேல்ஸில் நடைமுறைக்கு வருகின்றது.

இன்று (திங்கட்கிழமை) இந்த சேவை நடைமுறைக்கு வருவதாக சுகாதார அமைச்சர் வாகன் கெதிங் (Vaughan Gething) தெரிவித்துள்ளார்.

அறிவியல் ஆலோசனையின்படி இந்த முடிவினை எடுப்பதில் பெருமிதம் கொள்வதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

‘சோதனை, தடமறிதல், பாதுகாத்தல்’ அமைப்பு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திலும் நடைமுறையில் உள்ளது.

வேல்ஸில் தடமறிதல் பயன்பாட்டு நடவடிக்கையை கண்காணிக்க இதுவரை சுமார் 600பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படுவதால் 1,000பேர் வரை தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்திய வாரங்களில் வேல்ஸில் கொவிட்-19 சோதனை திறன் அதிகரித்துள்ளது. தற்போது ஆய்வகங்களில் ஒரு நாளைக்கு 9,000பேருக்கு சோதனை இடம்பெறுகின்றது.

முதல்முறையாக பிரித்தானியாவில், கொரோனா வைரஸின் பரவலைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட, தேசிய சுகாதார சேவையின் தடமறிதல் பயன்பாடு, வைட்டுத் தீவு (isle of Wight) பகுதியில் தொடங்கப்பட்டது.

இதன்மூலம் அங்கு சிறந்த பலன் கிடைத்ததால், தற்போது தேசிய சுகாதார சேவையின் தடமறிதல் பயன்பாடு வேல்ஸிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்