மாளிகாவத்தை துப்பாக்கிச்சூடு – பிரதான சந்தேகநபர் கைது
கொழும்பு – மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேகநபர்கள் குற்றத்தடுப்பப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இரவு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு- மாளிகாவத்தை பகுதியில் உள்ள வீட்டுத் திட்டமொன்றில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர் 39 வயதுடைய பிரபல பாதாள உலகத்தலைவரின் சகா என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
இரு பாதாள உலக கோஷ்டியினருக்கு இடையில் நீண்டகாலமாக நிலவும் பகைமையின் விளைவே குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமெனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை