பாதாளக் குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித்

இலங்கையில் அதிகரித்துள்ள பாதாளக் குழுவினரின் செயற்பாட்டை, கட்டுப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இன்று நாட்டில் பாதாளக்குழுவினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனால், வர்த்தகர்களுக்கு வியாபாரம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது மக்களின் சுதந்திரத்திற்கு விழுந்த அடியாகவே நாம் கருதுகிறோம்.

இந்த செயற்பாடுகளினால், தேசிய பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வரும் முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பாக ஆளும் தரப்பினர் அதிகமாக பேசினார்கள்.

ஆனால், இன்று என்ன நடந்துள்ளது? பேச மட்டும் கூடாது. மாறாக, செயற்பாட்டிலும் காண்பிக்க வேண்டும். கப்பம் கோரல், துப்பாக்கி கலாசாரம் என்பவற்றுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதாளக் குழுவினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதன் ஊடாக மட்டும்தான் பொது மக்களுக்கு முழுமையான பாதுகாப்பினை வழங்க முடியும்.

தேசிய பாதுகாப்பை பாதுகாப்போம் என்ற உறுதி மொழியுடன் ஆட்சிபீடமேறிய, தற்போதைய ஆட்சியாளர்கள் இதுதொடர்பாக துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.