துரைரட்ணம் விடயத்தில் அமீரின் தீர்ப்பும்! சுமந்திரன் விடயத்தில் சம்பந்தன் தீர்ப்பும்!

1959  ஆம் ஆண்டு இலங்கை நாடாளு மன்ற அங்கத்துவத் தொகுதிகளின் எல்லைகள் வரையறுக் கப்பட்டபோது வகுக்கப்பட்ட தொகுதிதான் பருத்தித் துறைத்தொகுதி. தொண்டைமானாறு தொடக்கம் வல்வெட்டித்துறை, பொலிகண்டி, பருத்தித்துறை, வல்லிபுரம், நாகர்கோயில், செம்பியன்பற்று, உடுத்துறை, ஆளியவளை, வெற்றிலைக்கேணி, முள்ளியான், கட்டைக்காடு வரைக்கும் வெற்றிலைக் கேணி கிழக்குப் பக்கமாக ஊர்கள் அடங்கிய தொகுதி அது.

இத் தொகுதி போக்குவரத்து கஷ்டமான மணற் பிரதேசமாகும். கடற்றொழிலாளர்கள் சமூகங்களை உள்ளடக்கியது.

தந்தை செல்வாவினால் பருத்தித்துறைக்கு எனத் துரைரெத்தினம் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு 1960 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டு 1983 வரை தொடர்ச்சியாக 5 தேர்தல்களிலும் வெற்றிபெற்று தமிழரசுக் கட்சியிலும், தமிழர்விடு தலைக் கூட்டணியிலும் ஈடுபட்டவர்.

1976ஆம் ஆண்டு மீண்டும் வரையறுக்கப்பட்ட போது வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு ஆகிய இரண்டு ஊர்களும் உடுப்பிட்டித் தொகுதியுடன் சில அரசியல் காரணங்களுக்காக இணைக்கப்பட்டு விட்டன. அப்போது 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது மீண்டும் இவரை வேட்பாளராக நிறுத்தியபோது அந்தத் தொகுதி மக்கள் சிலர் இவரை நிறுத்தக்கூடாது என்றும் பருத்தித்துறையைச் சேர்ந்தவரையே நிறுத்தவேண்டும் என்று அமிர்தலிங்கம் அவர்களிடம் முறையிட்டனர். கூடவே தமிழரசுக் கட்சிக் காரியாலயத்தில் கூடி பதாதை தாங்கி எதிர்ப்பையும் தெரிவித்தனர். பின்னர் திரு. அ.அமிர்தலிங்கம் தலைமையில் இதுபற்றி ஆராய ஒரு கூட்டம் (ஏன் விசாரணை என்றே கூறலாம்) நடை பெற்றது. துரைரத்தினம் மிகவும் கவலைப் பட்டார். அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு இறுதியாக இரண்டு வசனங்கள் மட்டும் பேசினார். ”இங்கே எனதுகைகளைப் பாருங்கள். இந்த கைகள் கறைபடிந்த கைகளா? எனது வீட்டுக் கதவு யாருக்காவது எந்த நேரத்திலாவது அடைக்கப்பட்டிருந்ததா?” – இந்த வார்த் தைகள் எல்லோரையும் உணர்ச்சிவசப்படுத்தின.

அதன்பின் அமிர்தலிங்கம் அவர்கள், துரைரத்தினம் அவர்களை அமர்த்திவிட்டு, ”துரையைப்பற்றி யார் என்ன கூறினாலும் நான் அவரை அறிவேன். எங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் அவர் உயர்வானவர். பண்பான நாடாளுமன்ற உறுப்பினர். மீண்டும் இவரே பருத்தித்துறைத் தொகுதி வேட் பாளர்” – எனக் கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். மீண்டும் அவர் 1977 இல் போட்டியிட்டு 1983 கலவரங்களிற்கு பின்பு பிரிவினைக்கு எதிரான உறுதிப்பிரமாணம் செய்யமறுத்து பதவியைத் துறந்தவர்.

இன்று அதேபோன்ற சம்பவம்தான் இரா. சம்பந்தன் அவர்களால் தமிழரசுக் கட்சிக்குக் கொண்டுவரப்பட்ட சுமந்திரனுக்கு ஏற்பட்டது போலும். தமிழ் மக்களின் அரசியல் உரிமை களுக்காகக் குரல் கொடுத்துவரும் சுமந்திரனை அரசியல் அரங்கைவிட்டு ஒதுக்கவேண்டும் என்ற நோக்கோடு சிங்கள செவ்வியில் சமுத் தித்த ஜயவிக்கிரம தனது கேள்விகளைக் கேட்டார். அதற்கு சுமந்திரன் நேர்மையான பதிலை அளித்திருந்தார். இதற்கு எமது கட்சியிலுள்ளவர்களும், மாற்றுக் கட்சியில் உள்ளவர்களும் கூடிப்பேசி எதிராகப் பேட்டியளிக்க, அதற்கு 14 -05 – 2020 ஊடகங்களில் சுமந்திரன் விளக்கம் கூறியிருந்தார்.

தமிழர் தரப்பில் மும்மொழிபேசும் ஆற்றலுள்ளவராக – அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நபராக  – சுமந் திரனே இன்று இருக்கின்றார். அதுபோல் சுமந்திரனை அரசியலிலிருந்து அகற்றுவதற்கு எத் தனை…. எத்தனை.. முயற்சிகள்.!  அவர் லண்டன் சென்றபோது இடையூறுகள்…. ஜெனிவா சென்ற போது நடுவீதியில் குறுக்கீடு….. ஆஸ்திரேலியாவில் கூட்டத்தில் பேசமுற்பட்டபோது தடுக்க முயற்சி….. இவற்றின் தொடர்ச்சிதான் சுமந்திரன் மீதான குற்றச்சாட்டுகள்.

எமது தமிழரசுக் கட்சியிலில்லாதவர்கள், தேர்தலில் வெற்றிபெற முடியாதவர்கள், சம்பந்தன் அவர்களுக்கு துரோகம் இழைத்தவர்களெல்லாம் சுமந்திரன் அவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றக் கேட்கமுடியுமா….?

இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் அவர்கள் COVID – 19 காரணமாக வீட்டில் இருந்தபடியே பத்திரிகைகளில் வந்த பேட்டிகளின் செய்திகள் பல வற்றையும் வாசித்ததோடு, சுமந்திரனின் சிங்களமொழிச் செவ்வியை அகலத் திரையில் போட்டுப் பார்த்துள்ளார். தனது செவ்விக்கு கூறிய விளக்கத்தையும் சுமந்திரனின் முகப் பக்கத்தில் வந்த காணொலியையும் உன் னிப்பாகக் கவனித்தார். சட்டத்தரணியான சம்பந்தர் தீர்ப்பைக்கூறி விடயத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார். அவர் குறிப்பாக தமிழர்மத்தியில் குழப் பத்தையும் ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்தும் நோக்கோடு கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிப்பதில் ”சுமந்திரன் நேர்மையாகவும் வெளிப் படையாகவும் செயற்பட்டுள்ளார்” என்று தீர்ப்பில் கூறினார்.

அத்தோடு கூட்டமைப்பின் சார்பில் தமிழருக்கான தீர்வு விடயத்தில் சம்பந்தரோடு, சுமந்திரனும் அரசாங்கத்தோடாயினும் சர்வதேசத்துடனாயினும் பேச்சுகளில் முக்கிய பங்கை வகிப்பவர்.

அமிர்தலிங்கம் மறைவிற்குப்பின்னர் எத்தனை தமிழரசுத் தலைவர்களை, தொண்டர்களை வடக்கு கிழக்கு மாகாணத்தில் நாம் இழந்துள்ளோம். இன்றய நிலையில் தமிழரசுக்கட்சிக்கும், குறிப்பாக பருத்தித்துறைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் சுமந்திரனின் சேவை இன்றியமையாதது.

ந.நகுலசிகாமணி
(தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தொண்டர் – கனடா)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்