அளுத்கம மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம்: உபபொலிஸ் பரிசோதகர், மூன்று பேர் பணி இடைநிறுத்தம்

அளுத்கம – தர்கா நகர், அம்பகஹ சந்தி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரணில் கடந்த மே 25 ஆம் திகதி கடமையாற்றிய பொலிஸாரால் 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட  சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டமை குறித்த சம்பவம் தொடர்பில், கடமை தவறிய குற்றச்சாட்டில் மூன்று பொலிஸார் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். உபபொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன் ஒருவர், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பணிகளே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ், களுத்துறை பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் களுத்துறை முதலாம் பிரிவு பொலிஸ் அத்தியட்சகரால் முன்னெடுக்கப்பட்ட விஷேட மேலதிக விசாரணைகளுக்கமைய இந்த பணி இடை நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டு, அம்மூவரும் இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

பணி இடை நிறுத்தம் செய்யப்பட்ட  உப பொலிஸ் பரிசோதகரும் சார்ஜனும் விஷேட கடமைகளுக்காக களுத்துறை பொலிஸ் வித்தியாலயத்திலிருந்து  குறித்த காவலரணுக்கு வரவழைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் கான்ஸ்டபிள்  அளுத்கமை பொலிஸ் நிலையத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கேசரியிடம் தெரிவித்தார்.

இவ்வாறான பின்னணியில்  சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுக்க டப்ளியூ.ஏ.சி.ஏ.பி.பீ. எனப்படும் பெண்கள்  மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பொலிஸ் அத்தியட்சகருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.