அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை- ரவி

நாட்டின் அனைத்து விடயங்களுக்கும்  அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லையென முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய வீரர்கள் தினத்தில் ஆற்றிய உரையின்போது சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்தால் சர்வதேச அமைப்புகளிலிருந்து வெளியேற தயங்கப்போவதில்லை என்று கூறியமையை எவ்வாறு பார்கின்றீர்கள் என்று  குறித்த ஊடகம் வினவியப்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக ரவி கருணாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டினுள் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் அழுத்தங்களை அளித்தால் அவற்றுக்கான தீர்வுகளை காண முயல வேண்டும். அவற்றை ஒழித்துமறைப்பதால் பயனில்லை. நடைபெறாத விடயங்களை கூறினால் ஜனாதிபதி கூறும் நிலைப்பாட்டில் இருப்பதில் தவறில்லை.

சர்வதேச நாணய நிதியம், நிதியுதவி அளிக்க வேண்டுமாயின் நிபந்தனைகளை விதித்து அவற்றை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென கோரினால் அதுதவறாகவே அமையும்.

அதேநேரம் நாட்டின் முன்னேற்றத்திற்கான நிபந்தனைகளாக இருந்தால் அவற்றை புறக்கணிக்கவும் முடியாது. ஆகவே இந்த இரண்டு நிலைப்பாடுக்கும் மத்தியில் தான் தீர்மானங்கள் உள்ளன.

இலங்கையை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதாக கூறப்பட்டபோதும் கடந்த ஐந்து வருடங்களில் எதுவுமே நடைபெற்றிருக்கவில்லை.

சர்வதேசத்துடன் இணைந்தே பயணிக்க வேண்டும். தனித்து செயற்படுவதால் எதனையும் செய்ய முடியாது. போரை நிறைவுக்கு கொண்டுவந்தது போன்று துப்பாக்கி மூலம் அனைத்தையும் நிறைவுக்கு கொண்டுவர முடியும் என்ற அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.