பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு

பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக பொதுச் சேவையினை பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்து அமைச்சர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து வழமைக்கு திரும்பவுள்ளன.

இதன்போது சுகாதார ஆலோசனைகள் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி வழங்குவது கட்டாயமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

பேருந்து மற்றும் ரயில்வே நிலையங்களில் கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், 50 வீதமான பயணிகளுடன் பேருந்து தனது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, பாடசாலை பேருந்துகள் மற்றும் சுற்றுலா பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகளை தற்காலிகமாக பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பேருந்துகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படின் இந்த பேருந்துகளும் சேவையில் ஈடுபடும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.