புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- செல்வம்
வடக்கில் புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்ட மக்களுக்கும் நஸ்டஈடு வழங்க அரசாங்க அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு நட்ட ஈடு வழங்கப்படுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் காற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள், தோட்டச் செய்கையாளர் அனைவருக்கும் நஸ்ட ஈடு வழங்க ஏனைய மாவட்டங்களுக்கு பொறுப்பான அரசாங்க அதிபர்கள் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், வடக்கில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் புயல் தாக்கத்தினால் பலத்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 21 ஆம் திகதியில் இருந்து காற்று அதிகரித்து காணப்பட்டது. புயல் அபாயத்தை தொடர்ந்து வீசிய காற்றினால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈட்டை வழங்க யாழ்ப்பாண அரசாங்க அதிபர் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
எனினும் வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள போதும் அதற்கு நஸ்டஈடு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறிப்பாக மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகள் மற்றும் தோட்டச் செய்கைகள் பாதிப்படைந்துள்ளன.
எனவே வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதோடு, ஏனைய தொழில் பாதிப்படைந்தவர்களுக்கு உதவிகளை மேற்கொள்ள அரசாங்க அதிபர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை