புதிய அரசமைப்பை உருவாக்கினால் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவீர்! மஹிந்தவுக்கு சம்பந்தன் அறிவுரை

“மக்கள் ஆதரவு பெற்ற ஒரு பலமிக்க தலைவரான மஹிந்த ராஜபக்ச, அவசரமானதும் கட்டாயமானதுமான புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியை நிறைவேற்றினால் வெறுமனே தேசிய அங்கீகாரத்தை மாத்திரமின்றி சர்வதேச அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெறுவார். இந்த விடயத்தில் எமது முழுமையான ஆதரவு அவருக்கு வழங்கப்படும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்தமையைப் பாராட்டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“மஹிந்த ராஜபக்ச தனது அரசியல் வாழ்க்கையில் ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளமை தொடர்பாக அவருக்குப் பாராட்டுத் தெரிவிப்பதோடு, எனது உளமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

இக்காலப்பகுதியில் அவர் ஓர் அரசியல்வாதியாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, ஓர் அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, பிரதமராக, நாட்டின் ஜனாதிபதியாக சாத்தியமான ஒவ்வொரு பதவியிலும் இலங்கைக்குச் சேவையாற்றியுள்ளார்.

தான் வகித்த இவ்வொவ்வொரு பதவியிலும் அவர் தனிச் சிறப்புடன் விளங்கியதோடு, நாட்டு மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் வென்றெடுத்தார். அவர் அடிப்படையில் தன்னை நம்பிய, தன்னால் வழிநடத்தப்படுவதற்கு விரும்பிய சாதாரண மக்களின் ஒரு தலைவராகத் திகழ்ந்தார்.

தான் வகித்த பதவிகளிலெல்லாம் அவர் அடிப்படையில் மக்களின் ஒரு நாயகனாகவே திகழ்ந்தார். மக்கள் அவரை மதித்தார்கள்; அவர் மக்களை மதித்தார். அவர் மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக விளங்கினார்; மறுபுறத்தில் மக்களே அவரது பெரும் சக்தியின் மூலமாக விளங்கினர்.

இதுவே எந்தவொரு அரசியல் தலைவரினதும் பலம்மிக்க பண்பாகும். மஹிந்த ராஜபக்சவிடம் இப்பண்பு மிகப் பெருமளவில் நிறைந்து காணப்பட்டது. அதுவே அவரது அரசியல் வெற்றிக்குத் திறவுகோலாகத் திகழ்ந்தது. இது ஏற்றுக்கொள்ளபடவேண்டிய ஒன்று.

இலங்கை மக்களின் சார்பாக, குறிப்பாக நாடாளுமன்றத்தில் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் சார்பாக அவருக்கு எமது உளமார்ந்த வாழ்த்துக்களையும் வெற்றிகரமானதோர் அரசியல் எதிர்காலத்துக்கான எமது நல்வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஒரு நாடு என்ற வகையில் இலங்கை தீர்க்கப்படாத பாரதூரமான பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. நாட்டின் அதி உன்னத சட்டமாக அமையும் புதியதோர் அரசமைப்பு நாட்டுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகின்றது.

நீண்டகாலமாக மக்கள் சிந்தனையிலிருந்துவரும் மாற்றங்களை உள்ளடக்கி புதியதோர் அரசமைப்பை உருவாக்குவதற்கு இலங்கை மக்கள் கடந்த பல தசாப்தங்களாக தமது தேசிய ஜனநாயகத் தீர்ப்புகளில் ஆணை வழங்கியுள்ளனர். அது குறித்து பெருமளவு கருத்தொருமைப்பாடும் நிலவுகின்றது.

இந்த அவசரமானதும் கட்டாயமானதுமான தேவையை நிறைவேற்றுவதற்கு மக்கள் ஆதரவு பெற்ற ஒரு பலமிக்க தலைவர் தேவை. சந்தேகத்துக்கிடமின்றி மஹிந்த ராஜபக்ச அந்த நிலையில் இருக்கின்றார். அந்தப் பணியை ஏற்று நிறைவேற்றுவதன்மூலம் மஹிந்த ராஜபக்ச மேலும் பாரிய உச்சத்துக்கு உயர்ந்தெழ வேண்டும். அது அவரை ஒரு சிறந்த இராஜதந்திரி என்ற மட்டத்துக்கு உயர்த்துவதோடு, அவருக்கு வெறுமனே தேசிய அங்கீகாரத்தை மாத்திரமின்றி சர்வதேச அங்கீகாரத்தையும் மதிப்பையும் வழங்கும். இந்த விடயத்தில் எமது முழுமையான ஆதரவு அவருக்கு உண்டு.

நீதி, சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்மையானதும் நிரந்தரமானதுமான ஒரு தீர்வைக் கொண்டு வந்த ஒரு தலைவராக அவர் இலங்கை வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் பெறுவார்.

மஹிந்த ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.