பொதுத்தேர்தல் திகதி குறித்த தீர்மானம் நாளை எட்டப்படாது

கொரோனா வைரஸ் தாக்கம் நிலவும் காலத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும் அதன் காரணமாக நாளை பொதுத்தேர்தல் குறித்த திகதியை தீர்மானிக்க முடியாத நிலை காணப்படுவதாக தேர்தல் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கு அவசியமான சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க கடந்த வாரம் வழங்கியிருந்தாலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும் அவர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த வாரம் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத்திற்கு பின்னர் தேர்தல் திகதி முடிவு செய்யப்படும் என்றார்.

இந்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களை அடிப்படையாக வைத்து வாக்காளர்கள், அரசியல் கட்சிகள், தேர்தல் செயலக பணியாளர்கள் மற்றும் வாக்குச் சாவடிகளிற்கான சுகாதார வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என தேர்தல் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கு அரசியல் கட்சிகளிற்கு அனுமதி வழங்கப்படும் வீடுவீடாக சென்று பிரச்சாரத்தை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளிற்கு மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுத் தேர்தலை நடத்த 7 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது இருப்பினும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கு அமைய கை சுத்திகரிப்பு மற்றும் முகக்கவசம் போன்ற மேலதிக பொருட்களை வாங்க வேண்டும், இவற்றின் செலவுகளை நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை என மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்