கொரோனா பாதிப்பு அதிகரிக்க ராஜபக்ச அரசே முழுக் காரணம் – ரணில் பகிரங்கக் குற்றச்சாட்டு…

எதிர்க்கட்சியின் நிலைப்பாடுகளை மாத்திரமின்றி சுகாதாரத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளையும் ராஜபக்ச அரசு புறக்கணித்தமையினாலேயே கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்கு நாட்டை முடக்க வேண்டியேற்பட்டது. மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியாமைக்கு ராஜபக்ச அரசே பொறுப்புக்கூற வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசு தனது பலவீனங்களை மறைப்பதற்காக கொரோனா வைரஸ் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் பற்றிய தகவல்களை மறைக்கின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட உறுப்பினர்கள் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்கள். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாளொன்றுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை 5 ஆயிரமாக அதிகரிக்குமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். ஆனால், கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி முதல் தற்போது வரை நாடளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 690 பி.சி.ஆர். பரிசோதனைகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலகின் ஏனைய நாடுகளைப் போன்று கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் அந்நாட்டு அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்றே ஐக்கிய தேசியக் கட்சியும் அரசுக்கு ஒத்துழைப்பை  வழங்கத் தயாராகவுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதும் நான் இந்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தேன்

அன்றைய தினம் நாட்டில் இனங்காணப்பட்டிருந்த நோயாளர்களின் எண்ணிக்கை 102 என்பதோடு மரணங்களும் பதிவாகியிருக்கவில்லை. எனினும், தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,800 ஐக் கடந்துள்ளது.

அரசு எதிர்க்கட்சியின் நிலைப்பாடுகளை மாத்திரமின்றி சுகாதாரத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளையும் புறக்கணித்தமையாலேயே நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இலங்கையின் சனத் தொகையில் மூன்று மடங்கு சனத் தொகையைக் கொண்ட சீனாவின் அயல் நாடான வியட்நாமில் நோயாளர்களின் எண்ணிக்கை 350 ஆக மாத்திரமே காணப்படுகின்றது. சுகாதாரத்துறையினரின் முறையான வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டமையே அந்த நாட்டில் நோயாளர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அத்துடன் அங்கு இதுவரையில் மரணங்களும் பதிவாகவில்லை. அத்தோடு சீனாவுக்கு அயல் நாடான கம்போடியாவிலும் இதுவரையில் மரணங்கள் பதிவாகவில்லை.

அரசு முறையான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாமையின் காரணமாகவே நீண்ட நாட்களுக்கு நாட்டை முடக்க வேண்டியேற்பட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முடியாமைக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும்.

இதனால் பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள். கொரோனா வைரஸ் பரவலை வைத்து அரசு அரசியல் இலாபம் தேடவே முயற்சிக்கின்றது. மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் வேலைத்திட்டங்கள் பிரதேச சபை உறுப்பினர்களால் அரசியல் மயமாக்கப்பட்டன. இதற்கான முழு பொறுப்பையும் அமைச்சரவையே ஏற்க வேண்டும்.

முகக் கவசங்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் என்பவற்றை பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டமைக்கு சுகாதார அமைச்சே பொறுப்புக்கூற வேண்டும்.

கொரோனா ஒழிப்புக்காக உலக வங்கியால் வழங்கப்பட்ட 230 மில்லியன் நிதி எதற்காகச் செலவிடப்பட்டது என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும். அரசு முறையாகச் செயற்பட்டிருந்தால் கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு கொரோன வைரஸ் பரவாது கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

கொரோனா ஒழிப்பு நடவக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதிலும் அரசுபின்னடைந்துள்ளது. கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசு முறையான தகவல்களை எதிர்க்கட்சிக்கு வழங்காமையும் பாரியதொரு பிரச்சினையாகும். அரசின் பலவீனத்தை மறைக்கவே இவ்வாறு தகவல்களும் மறைக்கப்படுகின்றன” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.