தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பதற்கு முன் தேர்தல் பிரசாரங்கள் எப்படி செய்வது என்பதை தெளிவூட்ட வேண்டும்…

தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பதற்கு முன் தேர்தல் பிரசாரங்கள் எப்படி செய்வது என்பதை தெளிவூட்ட வேண்டும்.

பா.அரியநேத்திரன்.மு,பா,உ.

தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்ற நெறிமுறைகளையே தேர்தல் ஆணைக்குழு கூறுகிறதே தவிர வேட்பாளர்கள் எப்படி கொரோனா வைரஸ் நோயை கருத்தில்கொண்டு பிரசாரங்களை செய்யலாம் என்பது தொடர்பில் வேட்பாளர்களுக்கு தெளிவூட்டப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தேர்தல் நடைமுறை தொடர்பாக அண்மையில் தேர்தல் ஆணைக்குழு தலைவர் கூறிய கருத்துக்கள் தொடர்பாக மேலும் கூறுகையில்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல் ஒத்திகை கடந்த 07/06/2020 ஞாயிற்றுக்கிழமை அம்பலாங்கொடையில் நடைபெற்றது.
தேர்தல் ஒத்திகையின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த தேசப்பிரிய,
வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு வரும் போது கறுப்பு அல்லது நீல நிற பேனாக்களை வாக்காளர்கள் எடுத்து வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும் வாக்களிக்கும் போது பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பாக வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக அனைத்து ஊடகங்களையும் அழைத்து விளக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள்,அல்லது சுயேட்சை குழுக்களின் பிரசாரங்கள் வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளை கவரும் பிரசாரங்கள் என்பன விகிதாசார தேர்தல் முறையில் மிக அவசியமாகும்.

தேர்தல் பிரசாரங்களை தற்போதய சூழலில் எவ்வாறு சுகாதார நடைமுறைகளை பேணி முன்எடுக்கவேண்டும் என்ற விடயத்தை இதுவரை தேர்தல் ஆணைக்குழு தலைவர் பொதுமக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் தெளிவூட்டப்படவில்லை.

தேர்தல் தினத்தில் வாக்குச்சாவடிகளில் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகளை மட்டும் ஒத்திகை பார்ப்பதற்கு முன்பு தேர்தல் பிரசாரங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் ஒத்திகை பார்ப்பது அவசியமாகும்.

தற்போதய பொதுத்தேர்தல் கொரோனா நோய் காலத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடக்கும் முதலாவது தேர்தலாக கருதப்படும் நிலையில் தற்போது நாளாந்தம் கொரோனா நோயாளர் தொகையும் கூடிச்செல்கிறது.

அவ்வாறான நிலையில் சமூகங்களுக்குள் சென்று வாக்காளர்களுக்கு தேர்தல் பரப்புரைகளை கட்டாயம் மேற்கொள்ளவேண்டிய அவசியம் சகல அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சை குழுக்களுக்கும் உள்ளது இதனை கருத்தில் கொண்டு உடனடியாக எவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்வது, பொதுக்கூட்டங்களை எவ்வாறு நடத்துவது, கருத்தரங்குகளை எந்த அடிப்படையில் மேற்கொள்வது, துண்டுப்பிரசுரங்களை வினியோகித்தல் போன்ற நடைமுறைகளுக்கு எவ்வாறான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது என்ற தெளிவூட்டல் மிக அவசியம் எனவும் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.