தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு இவை எதனையும் செய்யவில்லை. – ஞா.ஸ்ரீநேஷன்…

பேரின அடிப்படைவாத அதிகார வர்க்கத்தின் தேவைக்காக,அவர்களின் எடுபிடிகளாக இருந்து தமிழ்ப் புத்தியாளர்கள்,தமிழ் அரசியற்ற தலைவர்கள், ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், தொண்டர் அமைப்பினர் போன்றவர்களைக்  கடத்தி காணாமல்  செய்யும் பாதகமான செயலினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது செய்யவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேஷன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து ஊடாகவியலாளர்கள் எழுப்பிய வினாவிற்கு பதிலிறுக்கும் போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியாக, தமிழர் விடுதலைக் கூட்டணியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக கால தேவைக்கேற்ப எமது கட்சியானது, மாற்றத்துடன் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இக்கட்சி எவற்றைச் செய்தது என்பதை பலதடவைகள் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்  அதேபோல் எமது கட்சியானது எவற்றைச் செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

குறிப்பாக ஒடுக்கப்பட்ட தமிழர்களின் விடுதலைக்காகச் செயற்பட்ட தமிழரின் விடுதலைப்போராட்டத்தினை பேரின அதிகாரவர்க்கத்திடம் காட்டிக்கொடுத்து அழிப்பதற்கான துரோகத்திணை நாம் செய்யவில்லை, பேரின அடிப்படைவாத அதிகார வர்க்கத்தின் தேவைக்காக, அவர்களின் எடுபிடிகளாக இருந்து தமிழ்ப் புத்தியாளர்கள், தமிழ் அரசியற் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், தொண்டர் அமைப்பினர் போன்றவர்களைக்  கடத்தவுமில்லை,காணாமல் ஆக்கவுமில்லை.

அதற்கும் மேலாக தமிழ்ப் போராளிகளைக் காட்டிக் கொடுக்கவோ,கொல்லவோ,கைதிகளாய் சிறைகளுக்குள் தள்ளவோ இல்லை. எல்லைக் காவலர்களாகக் காத்து நின்ற போராளிகளைக் காட்டிக்கொடுத்து அவர்களை அழித்ததன் மூலம், வட-கிழக்கில் பேரின குடியேற்றம் நடைபறுவதற்கான கதவுகளைத் திறந்து விடவுமில்லை.

உழைப்புவாத, பிழைப்புவாத, சுயநல அரசியலுக்காக சோரம்போய்,பேரினவாதிகளிடம் தமிழர்களை அடைமானம் வைக்கவோ, விற்கவோ முற்படவில்லை. அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளால் சிறைகளை நிரப்பவோ, விடுதலைக்குத் தடையாகவோ இருக்கவில்லை. தமிழர்களின் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை இராணுவம் ஆக்கிரமிப்பதற்குக் கைக்கூலியர்களாகவும் காட்டிக் கொடுப்பர்களாகவும் இருக்கவில்லை.

அதுமட்டுமன்றி அங்கவீனர்களாக உடல்வலுவற்ற நிலையில், நிராயுத பாணிகளான போராளிகளை அழிக்கவும் இல்லை, தமிழ் பெண்களை இனவாதிகளுடன் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் கொல்லவுமிவில்லை. வடக்கு, கிழக்குப் பிரதேசவாதத்தின்னைதூண்டி கிழக்கில் தமிழரின் சமூக-அரசியல் பலத்தினை பலவீனப்படுத்தி பேரினவாதிகளிடம் கிழக்கைத் தாரை வார்க்க  விரும்பவுமில்லை. தமிழ்த்தாய்கள்,தமிழ்ச் சகோதரிகளை
விதவைகளாக்கி வேடிக்கை பார்க்கவுமில்லை.

மேலும் தொல்லியல் இடங்களைக்கண்டறிதல் என்ற பெயரில் வடக்குக் கிழக்கைப் பௌத்தமயமாக்குகின்ற ,இராணுவமயமாக்கின்ற அரசுடன் இணைந்து செயற்படவில்லை. தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீரவினை மறுக்கின்ற, குழப்புகின்ற பேரின அரசுடன் நிபந்தனை இல்லாமல் இணைந்து பணத்தையோ, பதவிகளையோ, பிற சலுகைகளையோ பெறவில்லை.

ஊழல்,மோசடிகள்,கையூட்டுப் பெறல், அதிகார துஷ்பிரயோகம், பாலியல் பலாத்காரம், மக்களை ஏமாற்றிக் கட்சி தாவுதல், இளைஞர்களை தப்பாக வழிப்படுத்தல், வெட்டுக் கொத்து வன்முறைகள் போன்ற செயல்களில் ஈடுபடவில்லை. குழந்தைகள் உட்பட ஆட்களைக் கடத்திக் கப்பம் பெறுதல், கொலை செயதல் போன்ற கொடுமைகளைச் செய்யவில்லை.

தமிழ் இளைஞர், யுவதிகளை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்துக் கைதிகளாக்கி விட்டு அவர்களை விடுவிப்பது போல் நாடகமாடவில்லை. வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட பேரினவாதக் கட்சியுடன் ஒட்டிக்கொள்வதிலும், அக்கட்சியின் துதி பாடுவதிலும் போட்டியிட்டு நிற்கவில்லை.

அதைவிட தமிழில் தேசிய கீதம் இல்லை, தைப் பொங்கலைத் தேசிய மட்டத்தில் கொண்டாட முடியாது, இந்துக் கலாசார அமைச்சு இல்லை, கிறிஸ்தவ அமைச்சு இல்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள், அவர்களைப் பாரக்க வேண்டுமாயின் மண்ணைத் தோண்டிப் பாருங்கள், சோறும்-தண்ணியுந்தான் தமிழரின் பிரச்சினை, அரசியல் தீர்வு இல்லை, ஶ்ரீலங்கா சிங்கள பௌத்த நாடு.. இப்படியான போக்குடைய  தற்கால அடிப்படைவாத அரசுடன் இணைந்து செயற்படவில்லை.

தமிழ்ச் சகோதரிகளைக் கடத்திச் சென்று, எமது இன எதிரிகளுடன் இணைந்து பாலியல் பலாத்காரம் புரிந்த பின்னர் குதறிக்கொலைகள் செய்யவில்லை. பச்சோந்திகளாய், துரோகிகளாய், சுயநலமிகளாய் மாறி, எதிரிகளிடம் பணம் சலுகைகளைப் பெற்று தேர்தல்களத்தில் குதித்து, தமிழர் வாக்குகளைச் சிதறடித்து,தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவ பலத்தினைக் குறைக்கவுமில்லை. பேரினவாதிகளுக்குப் பலம் சேர்க்கவுமில்லை.

பேரின அடிப்படைவாத அதிகார வர்க்கத்தின் எடுபிடிகளாகவும்,அடிவருடிகளாகவும் மாறி, தமிழர் பற்றியதும், தமிழர் போரியல் பற்றியதுமான தகவல்களை விற்றுச் சம்பளம் பெறுபவர்களுமில்லை,சலுகைகள் பெறுபவர்களுமில்லை. மொத்தத்தில்,எமது தமிழினத்திற்குப் பாதகமாகவோ, துரோகமாகவோ எமது கட்சியினரின் நடவடிக்கைகள் அமையவில்லை.  முக்கியமாக எமது எதிராளர்களிடம் எமது இனத்தைக் காட்டிக் கொடுக்கவுமில்லை  என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்