கிளிநொச்சி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியியின் பூநகரி 4ம் கட்டை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னாரிலிருந்து மணல் ஏற்றியவாறு யாழ். நோக்கி பயணித்த ரிப்பர் ரக வாகனம் வீதியைக் கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இந்த  விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் தவரஞ்சன் என்ற 41 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய செல்லத்துரை வசந்தகுமார் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற பகுதியை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் அதிகளவானோர் கூடியிருந்தனர்.

இந்த நிலையில் அமைதியின்மை ஏற்பட்டதால், அந்த பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்