நாயை கடத்தி கப்பம் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர், 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வசித்து வரும் ஒரு வயோதிப தம்பதியினருக்கு குழந்தை பேறு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் ‘பொமேரியன்’ இன நாய் ஒன்றினை மிக செல்லமாக வளர்த்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் வளர்ப்பு நாய், வீட்டில் நின்ற நிலையில் திடீரென காணாமல் போயுள்ளது. அதனை அவர்கள் அயலில் தேடி அலைந்து எங்கும் கிடைக்காததால் மனமுடைந்திருந்தனர்.

நாய் காணாமல் போன அன்றைய தினம் மாலை, அவர்கள் வீட்டுக்கு சற்று தொலைவில் வசிக்கும் இரு இளைஞர்கள், அவர்கள் வீட்டுக்கு வந்து உங்கள் நாயை ஒருவர் பிடித்து வைத்துள்ளார். அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் நாயை தருவதாக கூறினார்.

அதாவது நாய் வேணும் என்றால் 25 ஆயிரம் ரூபாய் தாருங்கள் என கேட்டுள்ளனர்.  அதனைத் தொடர்ந்து தம்பதியினரும் அதற்கு சம்மதித்து அவர்கள் கேட்ட பணத்தினை கொடுத்துள்ளனர்.

இவ்வாறு பணத்தினை பெற்று சென்றவர்கள், அரை மணிநேரத்தில் அவர்களின் நாயை கொண்டு வந்து ஒப்படைத்து விட்டு சென்றனர்.

தம்மிடம் பணம் பெற்று சென்றவர்கள்தான் நாயை தமது வீட்டில் இருந்து பிடித்து சென்று, பணத்தினை பெற்றுக்கொண்டு அதனை தம்மிடம் ஒப்படைத்துள்ளனர் என தம்பதியினர் சந்தேகிக்கின்றனர்.

அதேவேளை இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தால் தமது செல்லப்பிராணியான நாய்க்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடுமோ எனும் பயத்தில் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.