குற்றவாளிகளைப் பாதுகாக்காதீர் ஐ.நாவின் காலக்கெடு மார்ச் மாதம் மட்டுமே – கோட்டா அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியபடியால் அந்தத் தீர்மானங்களிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டோம் என்றோ அல்லது அந்தத் தீர்மானங்கள் வலுவிழந்துவிட்டன என்றோ அரசு எண்ணக்கூடாது. இலங்கை மீதான ஐ.நா. தீர்மானங்கள் இன்னமும் வலுவுடன்தான் இருக்கின்றன. அதனை நடைமுறைப்படுத்த எதிர்வரும் மார்ச் மாதம் வரைக்குத்தான் கால அவகாசம் இருக்கின்றது. அதற்குள் தீர்மானங்களின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

“ஐ.நாவின் தீர்மானங்களைக் குறித்த காலப்பகுதிக்குள் அரசு நடைமுறைத்தாவிடின் பெரிய பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும். அது முழுநாட்டுக்கும் பேராபத்தாக மாறும்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

“ஐ.நா. தீர்மானங்களின் பிரகாரம் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அரசு பதவிகளை வழங்கி அவர்களைப் பாதுகாக்கக்கூடாது” எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற நாள் தொடக்கம் அவரும் அவர் தலைமையிலான அரச தரப்பினரும் சர்வதேச அமைப்புகளுக்குச் சவால் விடும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். இதை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும்” எனவும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.