இனத்துக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் அமரர் துரைரெத்தினம்!

“சொத்து சுகபோக வாழ்க்கை என அலையும் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் சொத்து என்று எதையும் சேர்க்காது தனது மிகப்பெரும் சொத்தாக இருந்த இரு பிள்ளைகளை விடுதலைப் போராட்டத்திற்கு கொடுத்து விட்டு இறுதிக்காலத்தில் ஆச்சிரமத்தில் இருந்து காலமானவர்தான் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரத்தினம்.”

“தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கல்வி கற்கிறார்கள் என பரவலான குற்றச்சாட்டு காணப்படுகிறது. இந்த காலத்தில் சொத்து சேர்க்காத அரசியல்வாதிகள் இல்லை எனலாம்.

ஆனால் 23 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த துரைரத்தினம் அவர்களிடம் இருந்தது அவரின் மனைவியின் வீடு ஒன்றுதான். அதையும் இராணுவ ஆக்கிரமிப்பால் இழந்து போனார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம்

அவர்களின் பிள்ளைகள் இந்தியாவிற்கோ, லண்டனுக்கோ செல்லவில்லை. அவர்கள் சென்றது தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு தான்.

தொண்டமானாற்றை பிறப்பிடமாக கொண்ட கதிரிப்பிள்ளை துரைரத்தினம் 1930ம் ஆண்டு ஓகஸ்ட் 10ஆம் திகதி பிறந்தார்.

கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரியான அவர் ஆசிரிய தொழிலை ஆரம்பித்தார். சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்து சட்டத்தரணியும் ஆனார்.

சிறுவயது முதல் தமிழரசுக்கட்சியின் அகிம்சை போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் தனது 30வது வயதில் 1960ஆம் ஆண்டு தேர்தலில் பருத்தித்துறை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் 1983ம் ஆண்டு 6வது திருத்த சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.

சிரித்த முகம், மிக எளிமையான மனிதர். தேர்தல் பிரசார கூட்டங்களில் குட்டிக் கதைகளை சொல்லி சிரிக்க வைப்பார். அக்கதைகளில் ஆழமான கருத்துக்கள் பொதிந்திருக்கும்.

சொந்தமாக ஒரு வாகனம் வைத்திருந்தது கிடையாது. அக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன பெர்மிற் வழங்குவது கிடையாது.

கொழும்புக்கு புகையிரதத்திலேயே செல்வார். மெய்ப்பாதுகாப்பாளர்கள் கிடையாது. 1977ம் ஆண்டு தேர்தல் காலத்தில் பருத்தித்துறை தொகுதி மக்கள் பணம் சேர்த்து இவருக்கு ஜீப் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தனர்.

அந்த ஜீப் வண்டியின் சாரதியாக அவரின் மகனே இருந்தார். தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் சொன்ன கதை ஒன்று.

கொழும்பு சிராவஸ்தி ( நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாசஸ்தலம் ) முன்னால் உள்ள பஸ்தரிப்பிடத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்த போது அங்கு நீண்டகாலமாக கடைவைத்திருந்த ஒரு முதியவர் கேட்டாராம். ஐயா நீங்கள் எவ்வளவோ காலமாக நாடாளுமன்றத்திற்கு பஸ்ஸிலேயே போகிறீர்களே என…..

பஸ்ஸில் போவதால் தான் ஒவ்வொரு முறையும் எனது தொகுதி மக்கள் என்னை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் என தான் பதிலளித்ததாக கூறினார்.

1983ம் ஆண்டுக்கு பின்னர் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றனர்.

ஆனால் மானிப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் தனது உடுவில் இல்லத்திலும், கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் தனது நல்லூர் இல்லத்திலும், பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரத்தினம் தனது தொண்டமானாறு இல்லத்திலும் தங்கிருந்தனர்.

இந்த மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு இந்திய றோ அமைப்பு ரெலோ இயக்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அக்காலப்பகுதியில் இந்திய றோவின் வழிநடத்தலில் ரெலோ இயக்கம் பல படுகொலைகளை யாழ்ப்பாணத்தில் நடத்தி கொண்டிருந்தது.

இந்திய றோ அமைப்பின் உத்தரவை அடுத்து ரெலோவின் தலைவர் சிறிசபாரத்தினம் தனது பொறுப்பாளர்களான பொபி, தாஸ் ஆகியோருக்கு தமிழ் தலைவர்கள் மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு தகவல் அனுப்பினார்.

உடுவிலிருந்த தர்மலிங்கத்தையும் நல்லூரில் இருந்த ஆலாலசுந்தரத்தையும் சுட்டுக்கொல்லுமாறு பொபிக்கு தகவல் அனுப்பினார்.

தொண்டமானாறில் இருந்த கே.துரைரத்தினத்தை சுட்டுக்கொல்லுமாறு வடமராட்சி பொறுப்பாளர் தாஸிற்கு உத்தரவிட்டார்.

ஆனால் துரைரத்தினத்தை சுட்டுக்கொல்வதற்கு தாஸ் இணங்கவில்லை. வடமராட்சியில் மக்கள் செல்வாக்குள்ள ஒரு அப்பாவி மனிதரை எந்த குற்றச்சாட்டுக்களும் இன்றி எப்படி கொல்வது என அதற்கு அவர் இணங்கவில்லை. தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் அவர்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்.

ஆனால் பொபி உடனடியாக ஆலாலசுந்தரத்தையும் தர்மலிங்கத்தையும் வீட்டிலிருந்து கடத்தி சென்று சித்திரவதை செய்து சுட்டுக்கொன்று விட்டு அவர்களின் வீடுகளுக்கு அருகில் சடலத்தை வீசியிருந்தனர்.

துரைரத்தினம் அவர்கள் அந்த படுகொலையிலிருந்து தப்பியிருந்தார். 1983ம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் இளைஞர்கள் பலர் ஆயுதப்போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

துரைரத்தினம் அவர்களின் மகனும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். கமலை மட்டக்களப்பு படுவான்கரை மக்கள் பெரிதும் அறிந்திருந்தனர்.

குமரப்பாவுடன் நீண்டகாலம் மட்டக்களப்பு படுவான்கரையில் இருந்த அவர் மட்டக்களப்பில் பல தாக்குதல்களில் ஈடுபட்டவர். தந்தையை போலவே சிரித்த முகத்துடன் மக்களுடன் அன்பாக பழகுவதில் கமல் வல்லவர்.

நெல்லியடி மத்திய மகாவித்தியாலய இராணுவ முகாம் மீதான தற்கொலை தாக்குதலில் ஒரு அணிக்கு தலைமை தாங்கி சென்ற மேஜர் கமல் அந்த தாக்குதலில் வீரமரணத்தை தழுவிக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் மகனை மட்டுமல்ல மகளையும் விடுதலைப்போராட்டத்திற்கு வழங்கியிருந்தார்.

துரைரத்தினம் அவர்கள் வடமராட்சி கிழக்கு மக்களின் அன்புக்குரியவராக திகழ்ந்தார். அந்த கிராமங்களுக்கு செல்லும் அவர் அந்த மக்களுடன் தரையில் இருந்து உணவு உண்டு, சுகம் விசாரித்து வருவதை தனது கடமையாக கொண்டவர்.

எனக்கு வாக்குரிமை 1977ல் தான் கிடைத்தது. நான் வாக்களித்த முதலாவது அரசியல்வாதி துரைரத்தினம் அவர்கள் தான்.

ஒரு முறை தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் போது பருத்தித்துறை நகரப்பகுதி வாக்குகள் முதலில் எண்ணப்பட்டது. பருத்தித்துறை நகரசபை தலைவராக இருந்த நடராசா முன்னணியில் இருந்தார்.

ஆனால் துரைரத்தினம் சிரித்துக்கொண்டிருந்தார். அவரின் ஆதரவாளர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவர் தோல்யடையப்போகிறார், இந்த வேளையிலும் இவர் சிரித்து கொண்டிருக்கிறாரே என்று.

வடமராட்சி கிழக்கு வாக்குப்பெட்டிகள் எண்ணப்பட்ட போது 99வீதமான வாக்குகள் துரைரத்தினம் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குகளால் அவர் வெற்றியடைந்திருந்தார்.

அப்போது துரைரத்தினம் அவர்கள் சொன்ன வார்த்தை. எனக்கு தெரியும் வடமராட்சி கிழக்கு மக்கள் என்னை கைவிட மாட்டார்கள்.

தேர்தல் முடிந்த பின் மருதங்கேணியிலிருந்து ஆழியவள வரை பூப்பந்தல் ஒன்றில் அவரை மக்கள் ஊர்வலமாக கொண்டு சென்றதை சிறுவனாக நின்று பார்த்தது இன்றும் மனதில் நிழலாடுகிறது.

வடமராட்சி லிபிரேசன் ஒப்பிரெசன் இராணுவ நடவடிக்கையின் போது தொண்டமானாற்றில் உள்ள வீடு இராணுவ ஆக்கிரப்புக்குள்ளாகியது. அங்கிருந்து இடம்பெயர்ந்த அவர் அகதி முகாமில் மக்களோடு மக்களாக இருந்தார்.

கைவெனியனும் சாறனுடன் அகதி முகாமில் மக்களோடு மக்களாக வாழ்ந்தார். தனது நாடாளுமன்ற ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை வயோதிபர்களை பராமரிக்கும் ஆச்சிரமத்திற்கு வழங்கி வந்தார்.

இறுதிக்காலத்தில் அந்த ஆச்சிரமத்திலேயே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் அவர்கள் தனது 65வது வயதில் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி காலமானார்.

65வயது என்பது மரணத்தை நெருங்கும் முதுமை வயது அல்ல. ஆனால் துரைரத்தினம் அவர்களின் இறுதிக்காலம் என்பது வேதனையும் மன அழுத்தமும் நிறைந்த காலமாக இருந்தது.

பிள்ளைகளை இழந்த சோகம், சொந்த வீடு வாசல்களை இழந்த மன அழுத்தம். தான் நேசித்த மக்கள் சந்தித்து வந்த இடப்பெயர்வு உயிரிழப்பு துன்பங்கள்.

சிரித்த முகத்துடன் வலம் வந்த அந்த மனிதன் இறுதியில் துன்பங்களையும் வேதனைகளையும் சுமந்தவாறு 65வயதிலேயே இந்த உலகை விட்டு சென்று விட்டார்.

அமரர் துரைரத்தினம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இப்போது இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் கற்க வேண்டும்.

இப்போது உள்ள அரசியல்வாதிகளை பார்க்கும் போது அமரர் துரைரத்தினம் போன்றவர்கள் மீண்டும் பிறந்து வரமாட்டார்களா என்று எண்ணத்தோன்றும்.

இப்போது இருக்கும் இளைய தலைமுறையினருக்கு அவரைப்பற்றி தெரியாவிட்டாலும் எங்களை ஒத்த தலைமுறையினர், அதற்கு முன்னைய தலைமுறையினர் மனங்களில் அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

– இரா.துரைரட்னம் –

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்