யாழில் புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது!

யாழ். நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகில் வீதியோரமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

மோட்டர் சைக்கிளில் வந்த இரு நபர்களே காண்ணாடி கூட்டை சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில் தாக்குதல்தாரிகளை இனம் காணும் முகமாக விகாரையை சூழவுள்ள பிரதேசத்தில் காணப்படும் CCTV காணொளிகளை பொலிஸார் பரிசோதித்து வருகின்றனர்.

அதேவேளை, இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், இது தொடர்பில் மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நான் நினைக்கின்றேன்  வேண்டத்தகாதவர்களால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். நான் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றேன். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழர், சிங்களவர் முஸ்லிம் என்ற வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம். அதனை குழப்புவதற்காக சிலரால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதுதான் எனது கருத்து.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த விடயம் தொடர்பில் தென்பகுதியில் உள்ள பௌத்த மக்களோ அல்லது வேறு இன மக்களோ குழப்பமடைய வேண்டாம். எமது இன ஒற்றுமையை குழப்புவதற்காக இந்த விடயம் இடம்பெற்றிருக்கலாம்.

இந்த விடயத்தினை பெரிதாக்கி எமது இன ஒற்றுமையை குலைக்காது அனைவரும் ஒற்றுமையாக செயற்படுமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

இனவாததை தூண்டுபவர்களால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். எனினும் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சம்பந்தப்பட்டவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்“ எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.