சுதந்திரபுரம் படுகொலை – 22ஆம் ஆண்டு நினைவேந்தல் தடைகளைத்தாண்டி அனுஷ்டிப்பு…

முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில், கடந்த 1998 ஆம் ஆண்டு இலங்கை விமான படையாலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதலில் 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையிலான 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், 10.06இன்றையநாள் போலீசாரின் தடைகளைத் தாண்டி இடம்பெற்றுள்ளன.

முல்லைத்தீவு – சுதந்திரபுரம், நிறோசன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் கொரோனாத் தொற்றைக் காரணங் காட்டி போலீசார் குறித்த நினைவேந்தல் நிகழ்விற்கு தடை விதித்திருந்தனர்.

இந் நிலையில் பின்னர் சுதந்திரபுரம் பகுதியில், குறித்த படுகொலைசெய்யப்பட்டவர்கள் சிலரை புதைத்த இடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கொரோனாத் தொற்று சுகாதார வழிமுறைகளுக்கு ஏற்ப, கையுறை, முகக்கவசம், மற்றும் சமூக இடைவெளி பேணப்பட்டு குறித்த நினைவேந்தல் நிகழ்வினை, உரியவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

நினைவேந்தல் நிகழ்வில், முதலாவதாக படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.குறித்த தாக்குதலின் போது தமது குடும்பத்தில் 4 பிள்ளைகளை இழந்த தந்தை பிரதான ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்.

அதனையடுத்து படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் முன்னாள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன், மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்