வவுனியாவில் சாரதி அனுமதி பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை பெறுவதில் சிரமம் – அலுவலர்கள் பொதுமக்களுக்கிடையே குழப்பம்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்கள், சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கச் செல்பவர்கள் மற்றும் சாரதிகளுக்கான பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை தேசிய போக்குவரத்து திணைக்களத்தின் கீழான வைத்திய நிறுவனத்திற்கு செல்பவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு சுமார் பல மணிநேரமாக காக்க வைக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக அதிகாலை 12.30 மணிக்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் பிற்பகல் 2 மணிவரையில் காத்திருந்தும் மருத்துவ சான்றிதழை பெறாமல் திரும்பி செல்ல வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் அதிகளவான மூவின மக்கள் சேவை பெறுவதற்காக நேற்று வருகை தந்திருந்த போதும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானோரை உள்வாங்கியதாகவும் இதனால் மக்களுக்கும், அலுவலர்களுக்கும் இடையே சற்று குழப்பநிலை ஏற்பட்டிருந்ததாகவும் அவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானோரை உள்வாங்குவதாக இருந்தால் விளம்பரப்பலகையில் காட்சிபடுத்தியிருக்க வேண்டும் அவ்வாறு எதுவும் இல்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு சேவையை பெற்றுக்கொள்ள வரும் அரச உத்தியோகத்தர்கள், தனியார் நிறுவனங்களில் தொழில் புரிபவர்கள், பெண்கள் அனைவரும் வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகள் காரணமாக பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளதோடு சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் இருக்கும் போக்குவரத்து வைத்திய சான்றிதழ் நிறுவனத்திற்கு பொறுப்பான அதிகாரியை சந்திப்பதற்காக ஊடகவியலாளர்கள் சிலர் காத்திருந்தும் அது பலனக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.