குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்காக நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின்போதே அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு இதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டது.

பாரம்பரிய முறைமைகளில் இருந்து விலகி அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைக்கு மாற்றுவதற்கு தேவையான திட்டங்களை விரைவாக தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

கடந்த 05 வருட இறுதியில் நிறுவனத்தை பொறுப்பேற்றபோது இருந்த நிலை மற்றும் தற்போதைய நிலை பற்றி அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அடுத்த வருடத்தில் அடையவேண்டிய இலக்குகளை இந்த வருடத்திலேயே திட்டமிட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இதேநேரம், அரச நிறுவனங்களிடமிருந்து கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்க வேண்டிய பணம் உரிய முறையில் கிடைக்காத காரணத்தினால் எழுந்துள்ள பிரச்சினைகளும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

அது குறித்து கண்டறிந்து பணத்தை அறவிடுவதற்கு தேவையான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.