யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்க்கையை அரசியல்வாதிகள் மீண்டும் கட்டியெழுப்பவில்லை- சுமணரட்ன தேரர்

நாடாளுமன்றத்தில் 30 வருட காலமாக எமது அரசியல்வாதிகள் தூங்கி விழுந்தார்களே தவிர யுத்ததிற்கு முகங்கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவில்லை என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி சுமணரட்ன தேரர் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுமணரட்ன தேரர் களமிறங்கியுள்ளது தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (புதன்கிழமை) குறித்த விகாரையில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற பௌத்த மதகுரு என்ற வகையில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மக்கள் தொடர்பாக கூடிய கவனமும் அக்கறையுடன் செயலாற்றி வந்த மதகுரு நான் என்பதை கிழக்கு வாழ் மக்கள் அறிவார்கள்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக் குழு 22இல் மேளம் சின்னத்தில் இலக்கம் ஒன்றில் போட்டியிடுகின்றேன்.

யுத்தகாலத்தில், நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூலை முடுக்கிலுள்ள கிராமங்கள்தோறும் சென்று அனைத்து தமிழ் மக்களுடைய பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் முன்நின்ற மதகுரு என்ற அடிப்படையில் அந்த காலத்திலிருந்து இதுவரை சில விடயங்களை கவனித்து வந்தேன்.

இந்த தமிழ் மக்களை அதிலிருந்து விடுவிப்பது யார்? தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு முன்னிற்கக்கூடிய சரியான தலைமைத்துவத்தை இதுவரை எடுத்திருப்பவர் யார்?

இம்மக்கள், 30 வருடகாலமாக முகங்கொடுத்து வேதனைப்பட்ட மக்களாக இருந்தபோதும் அவர்களது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய அரசியல்வாதியை காணமுடியவில்லையென கவலையடைந்தேன். எனது வாழ்நாள் காலத்தில் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என இம்முறை இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.

எனவே, அனைத்து மதத் தலைவர்களிடம் வேண்டுவது மதகுருமார்களின் தலைமைத்துவத்தில் எம்மால் செயற்படக்கூடிய பலத்தின் அடிப்படையில் எமது நாட்டின் ஆட்சியாளர்களுடன் பேசி 30 வருடங்களுக்கும் மேலாக மக்கள் அனுபவித்துவந்த கஷ்டங்களுக்கு ஏதேனும் ஒருவகையில் அவர்களை மீட்டெடுத்து எதேனுமொரு செயற்பாட்டை செயற்படுத்தும் நோக்குடன் மதத் தலைவர்களின் பங்களிப்பை நான் எதிர்பார்க்கின்றேன்.

இதேவேளை, நான் மக்களிடம் கேட்டுக்கொள்வது, உங்களைவிட உங்கள் குழந்தைகளது வாழ்க்கையினை வென்றெடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கையையும் எடுப்பேன், எனவே தேர்தலில் வாக்கினை விரயம் செய்யாது நான் நாடாளுமன்றம் செல்வதற்காக வாக்களியுங்கள்” என அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்