தமிழ் மக்களின் அபிலாசைகளுடனான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அரசாங்கத்துக்கு ஆதரவு- சுமந்திரன்
தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் விதமான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால் அதை வழங்கத் தயாராக இருக்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பலமான ஒரே அணியாக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டிய தேவை உள்ளது எனவும் . எமது மக்கள் இதனை ஏற்று மாற்று அணிகள் என்ற கோசத்தைப் புறக்கணித்து, பலமான ஒரு அணியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்ய வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்து்ளளார்.
யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2015 இல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்தில் நாமும் ஓரளவு பங்களித்திருந்த நிலையில், இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மீட்சிக்கும் நான்கரை வருடங்களில் பல விடயங்களை மேற்கொண்டோம்.
அபிவிருத்தி விடயத்தில் வடக்கு, கிழக்கிற்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டது. நிலம் விடுவிக்கப்பட்டது. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அரசியலமைப்புப் பேரவை உருவாக்கப்பட்டது. இவையெல்லாம் முன்னேற்றங்களாக நாம் கருதுகிறோம்.
ஆனால், முழுமையாக எதையும் நாம் தீர்க்க முடியவில்லை. அரசியலமைப்பு நகல் வடிவம் நாடாளுமன்றத்திற்கு வந்தாலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. அரசியல் கைதிகள், நிலம் விடுவிப்பு, அபிவிருத்தித் திட்டங்கள் எதிலும் முழுமையடையாமல், மக்கள் முன்சென்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்.
2015 தேர்தலிற்கும் முற்றும் மாறான ஒரு தேர்தல் இதுவாகும். 2015 ஆட்சி மாற்றத்தினால் ஏற்பட்ட நன்மையைத் தொடர்ந்து பேண முடியாத நிலையில், பழைய ஆட்சியாளர்களிடமே ஆட்சி சென்றுள்ளது. வரும் தேர்தலிலும் அவர்கள் பலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய ஜனாதிபதி எடுத்துள்ள சில முடிவுகள், அவரது ஆட்சி எப்படியாக அமையுமென்பதை காண்பிக்கிறது. கிழக்கில் மிகப் பெரும்பான்மையாக தமிழர்கள், முஸ்லிம்கள் இருந்தாலும், கிழக்கு தொல்பொருள் செயலணியில் தமிழர்கள், சிங்களவர்கள் இணைக்கப்படவில்லை.
அகழ்வாராய்ச்சிக்கு பெயர் பெற்றவர் எனச் சொல்லப்படும் எல்லாவல மேதானந்த தேரர் அதில் உள்ளார். அவரது கருத்து முழுவதும், இந்த பிரதேசங்கள் முழுவதும் சிங்கள பௌத்த பிரதேசங்கள், அவர்களின் மேலாதிக்கம் பேணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளவர். இராணுவ அதிகாரிகளும் உள்ளனர்.
இதேபோல், ஒழுக்கத்தைப் பேண இன்னொரு செயலணி, இராணுவ அதிகாரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், மதத் தலங்கள் தவிர்த்து, ஒழுக்கத்தைப் பேண ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர்களாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக இராணுவ மயமாக்கல் நடக்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் இல்லாவிட்டால் இவர்கள் ஒருவருக்கும் பதில் சொல்ல முடியாத, பொறுப்புக்கூறும் நிலை அல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையில் அவர்கள் பலமாக இருந்தாலும், எமது பிரதேசங்களில் நாம் எமது இருப்பைப் பாதுகாக்க வேண்டும்.
அதனால், முன்னெப்பொழுதுமில்லாதவாறு தமிழ் மக்கள் ஒரு அணியாக தமது பிரதிநிதித்துவத்தை காட்ட வேண்டிய தேவையுள்ளது. பல பிரிந்து, பல அணிகளாகப் போனால் அது எம்மை பலவீனப்படுத்தும். இன்றைக்கு இருக்கும் கட்சிகள், அணிகளில் வடக்கு, கிழக்கிலுள்ள மக்களை ஓரணியாக பிரதிநிதித்துவப்படுத்தும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. அதனால் மாற்று அணிக் கோசங்களை புறக்கணித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றியடைய செய்ய வேண்டும்.
நாம் நாடாளுமன்றம் போய் என்ன செய்ய போகிறோம்? கடந்த 5 வருடத்தில் செய்யாததை இனி செய்யப் போகிறோமா என கேட்கிறார்கள். 5 வருடங்களில் நிறைய செய்யப்பட்டுள்ளது. நாம் நாடாளுமன்றம் போகும்போது, எமது அரசியல் அபிலாசையைத்தான் வலியுறுத்துவோம். தீர்வைப் பெற்றுத்தருவது எமது தலையாய கடமை. அதில் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லாமல் செய்வோம். பெற்றுத் தருவோம்.
ஆனால், அரசியல் தீர்வு வரும்வரை மக்களின் வாழ்வு எப்படியாவது இருக்கட்டும் என விடவும் மாட்டோம். கடந்த அரசின் காலத்திலும் நாங்கள் சில முன்னெடுப்புக்களை செய்தோம். அரசாங்கத்திலிருந்து பணத்தைப் பெற்று அபிவிருத்தித் திட்டங்களைச் செய்தோம்.
ஒரு கட்டமைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்திற்குள் செல்ல வேண்டிய தேவையுள்ளது. விசேடமாக ஒரு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். பொருளாதாரம் எப்படியிருக்க வேண்டுமென்றால், இளையவர்களிற்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இது இலங்கை முழுவதுமுள்ள பொருளாதாரத் திட்டமென்றாலும், வடக்கு கிழக்கில் விசேடமாக உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
இது அத்தியாவசியமானது. இது பற்றித் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடுவோம். எமது மக்கள் தொடர்ந்து இங்கு வாழ்ந்தாலே எமது இருப்பு பாதுக்கப்படும். இளையவர்கள் வேலையில்லையென வெளிநாடு சென்றால், இனப்பிரச்சினைத் தீர்வுக்கே தேவையில்லாத நிலையேற்படலாம்.
மக்களின் வாழ்க்கை கட்டியெழுப்பப்பட வேண்டும், இளையவர்களிற்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மக்கள் இங்கு வாழ வழியேற்படுத்த வேண்டும். அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. புலமையாளர்களுடனும் பேசியுள்ளோம். அவர்களின் உதவியுடன் பொருளாார மீள் எழுச்சியென்பதற்கு வருகிற பாராளுமன்ற காலத்தில் கொடுப்போம்.
இதேவேளை, திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் மரணத்திற்கு எமது அனுதாபத்தைத் தெரிவித்து கொள்கிறோம்.
கொரோனா போகும் போது, ஜனநாயகமும் போய்விடும் என்ற பயமிருந்தது. இதனால்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென விரும்பினோம். தேர்தல் சுயாதீனமாக இருக்க வேண்டும். தேர்தல் நடத்தப்பட வேண்டும், நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து அரசாங்கம் மக்களின் அச்சத்தை நீக்க வேண்டும்.
அரசாங்கத்திற்கு ஆதரவு எனச் சொல்ல மாட்டேன். நாம் அரசாங்கத்தை உருவாக்கிய போது கூட அரசாங்கத்தில் இணையவில்லை. எமது இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து நீண்டதூரம் பயணித்துள்ளோம். அப்படியான சூழலில், அதை நிறைவுக்குக் கொண்டுவர அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவைப்பட்டால், அந்தத் தீர்வு எமது அபிலாசைகளைத் தீர்க்குமாக இருந்தால் நிச்சமாக ஆதரவைக் கொடுப்போம்.
ஜனவரி 3ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, புதிய அரசியலமைப்பின் அவசியத்தை சொன்னார். நான் பின்னர் உரையாற்றியபோது, அதை சொல்லியிருந்தேன். நாம் அரசியலமைப்பை உருவாக்கியபோது சொன்ன 3 விடயங்களை அவரும் சொல்லியிருந்தார். அதனால் தொடக்கத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டியதில்லை.
அண்மையில் பிரதமரை சந்தித்தபோது, உங்களிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது. நீங்கள் இதயசுத்தியுடன் செயற்பட்டு, ஜனநாயக அடிப்படையிலான தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யக்கூடிய விதமாக அரசியலமைப்பை தயாரித்தால், அதைப் பூர்த்திசெய்யவும், தயாரிக்கவும் எமது முழு ஆதரவைத் தருவதற்குத் தயாராக இருப்பதாக சொல்லியிருக்கிறேன்.
அரசியல் கைதிகள் 96 பேரின் பெயர் விபரங்களை வழங்கியுள்ளோம். நீதியமைச்சர் அண்மையில் பத்திரிகையொன்றற்கு தெரிவித்தபோது, அதில் 84 பேரின் பெயர்களைத் தெரிவுசெய்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழங்கியிருப்பதாகவும், அவரது பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் எப்படி செயற்படுவார்கள் எனத் தெரியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் எமது கொள்கையல்ல என மாவை சேனாதிராசா சொன்னதாக வெளியான பத்திரிகைச் செய்தியைப் படித்தேன். ஆனால் அவர் அப்படி சொன்னாரா என்பதை அவருடன் பேசாமல் என்னால் பதிலளிக்க முடியாது.
முன்னாள் போராளிகளை கட்சியில் சேர்க்க வேண்டுமென ஒரு தடவை கட்சிக்குள் முன்மொழிந்தபோது, நான் மட்டும்தான் ஆதரித்தேன். அந்த நிலைப்பாட்டில் எப்பொழுதும் இருக்கிறேன். எமது உரிமைக்காக அவர்கள் ஒரு முறையை உபயோகித்து போராட்டம் நடத்தினார்கள். அந்த வடிவத்திலான போராட்டம் முடிந்து விட்டது. ஆனால் எந்த அர்ப்பணிப்புடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்களோ, அந்த அர்ப்பணிப்பு இருக்கும். அவர்களிடம்தான் கூடுதலாக இருக்கும். வேறொரு வடிவத்தில் போராட்டம் நடந்தாலும் அவர்களின் அர்ப்பணிப்பு மிகமிக அத்தியாவசியமானது” என்று குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை