சதிகாரர்களை தோற்கடிக்கத் தவறினால் அம்பாறையில் தமிழர் பிரதிநிதியை இழக்க நேரிடும்- வேட்பாளர் கணேஸ்

சதிகாரர்களை தோற்கடிக்கத் தவறினால் அம்பாறையில் தமிழர் பிரதிநிதியை இழக்க நேரிடும் என அம்மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் வாக்கு வங்கி மூன்றாம் நிலையில் இருக்கின்றது எனவும் பலர் தேசியக் கட்சிகளின் சலுகைகளுக்கும் பணத்திற்கும் உள்வாங்கப்பட்டு தமிழர்களின் வாக்குகளை கூறுபோடும் சதிவேலைகளில் இறங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “எமது தமிழ் மக்கள் அற்பசொற்ப சலுகைகளுக்காக ஒருபோதும் சோரம் போகமாட்டார்கள். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதனை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபித்துக் காட்டவேண்டிய நிலையில் நாம் அனைவரும் இருக்கின்றோம்.

அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அதிலும் முக்கியமாக தமிழர்களின் நில அபகரிப்பு, கலாசார சீரழிப்பு போன்ற பிரச்சினைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதிலிருந்து எம் இனத்தினைப் பாதுகாக்க வேண்டும்.

இந்நிலையினைக் கருத்திற்கொண்டு  நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து இரண்டு பிரதிநிதிகளை அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்ய வேண்டும். அப்போதுதான் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களையும் நிலங்களையும் பாதுக்கமுடியும் .

தற்போது, ஐ.நா.வில் தமிழ் மக்களுக்கான நீதிப் பொறிமுறை விவகாரம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஒட்டுமொத்த தமிழர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் இருக்கின்றார்கள் என்ற செய்தியினை ஐ.நா.விற்கும் உலகத் தலைவர்களுக்கும் இத்தேர்தல் மூலம் பறைசாற்ற வேண்டும்.

என்னுடைய பாடசாலைக் காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் உரிமைக்காக பலவழிகளிலும் செயற்பட்டவன் என்பதுடன் தமிழ் மக்களின் குரலாக ஐ.நா. கூட்டத் தொடரில் பலதடவை கலந்துகொண்டு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினையினை முன்வைத்திருந்தேன்.

விசேடமாக அம்பாறை மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் நில ஆக்கிரமிப்புக்கள் சம்பந்தமாகவும் பக்க அறைகளில் இராஜதந்திரிகளுடன் பேசியிருக்கின்றேன். என்னைப் பொறுத்தமட்டில் எமது மக்களின் குரலாக என்றும் ஒலித்துக்கொண்டே இருப்பேன்” என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்