முடியுமானால் ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் – தலதா அத்துகோரல

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதல்ல, முடியுமானால் ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிகளில் ஏன் இராணுவத்தினர் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளனர் ? இராணுவமயமாக்கலுடனான ஏகாத்தியத்தியத்தை நோக்கி நாடு செல்கின்றதா?

மக்களைப் பற்றி சிறுதும் சிந்திக்காது தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டது. ஜூன் 2 ஆம் திகதி புதிய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது என்று தெரிந்திருந்தும் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளின் காரணமாகவே இன்று கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

இதற்கு ஜனாதிபதியும் இந்த அரசாங்கமுமே பொறுப்பு கூற வேண்டும். ஏகாதியத்திய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் தற்போது தேர்தல் அத்தியாவசியமானதாகும்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதல்ல,  முடியுமானால் தற்போதைய அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சவால் விடுகின்றேன்.

ஆர்ப்பாட்டம் என்பது ஜனநாயகத்தின் மூலக் காரணியாகும். தற்போது அது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டம் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய உலகிலுள்ள ஒரு மனிதனின் கொலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மனசாட்சியற்ற விதத்தில் பொலிஸார் செயற்பட்டனர்.

ஆண் மாத்திரமல்ல. பெண்களும் பாரபட்சமின்றி தாக்கப்பட்டனர். நல்லாட்சி அரசாங்கத்தில் கொழும்பில் தினமும் ஏதேனுமொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறு செயற்படவில்லை.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 6 மாத காலத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதைத் தவிர வேறு எந்த வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்