1,877 ஆக அதிகரித்தது கொரோனாத் தொற்று – நேற்று 8 கடற்படையினர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்

நேற்றிரவு 10.45 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,877 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 08 பேரும் கடற்படையினராவர்.

இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 04 கடற்படையினரும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 03 கடற்படையினரும், விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து ஒரு கடற்படை சிப்பாயும் நேற்று கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றுக்குள்ளான மேலும் 28 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். இதன்படி தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,150 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 716 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 11 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 51 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்