சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில்  இந்த விழிப்புணர்வு ஊர்வலம்  இடம்பெற்றது.

குறித்த ஊர்வலத்துக்கு முன்னதாக காலை11 மணியலவில், வவுனியா- தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊர்வலமாக சென்ற பெண்கள், மன்னார் வீதி வழியாக பூங்கா வீதியை அடைந்து, பழைய பேருந்து நிலையம் வரை சென்றிருந்ததுடன், சிறுவர் உரிமைகளை வலுப்படுத்தும் விதமான துண்டுபிரசுரங்களை விநியோகித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், “குடும்பம் மற்றும் சூழல் முறைக்கேடானதெனில் பிள்ளையும் சமூக சீர்கேடுகளுக்குள் உள்ளாக்கப்படும்.

அவ்வாறான பிள்ளை, துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சந்தர்பம் அதிகம். தற்போது இலங்கையில் அதிகமான வழக்குகள் சிறுவர் குற்றச்செயல் சார்ந்ததாகவே இருக்கின்றது.

சிறுவர் குற்றச்செயல்கள் நடந்ததை விட மிக குறைந்தளவிலேயே அது பதிவு செய்யப்படுகின்றது. இது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தடையாக உள்ளதுடன், இடம்பெற்ற குற்றசெயல்களானது அப்பிள்ளைக்கு உடல், உள ரீதியாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வழி தவறுவது எமது எதிர்கால சமூகமே.

மேலும் பாதிக்கப்படும் அவர்கள், பெற்றோருக்கும் நாட்டிற்கும் சிறந்த பிரஜையாக இல்லாமல் சட்டவிரோத செயற்பாட்டாளர்களாக உருவாக்கப்படுகின்றார்கள்.

எனவே உங்கள் பிள்ளைகளுக்கு முடிந்தவரை அன்பு அரவணைப்பை கொடுத்து, அவர்கள் தொடர்பாக எந்நேரமும் தேடிப்பாத்து, பாதுகாப்பை வழங்குவதன் மூலம் சிறந்த பெற்றோராக இருக்க முடியும்” என்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.