சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அடுத்த வாரம் முதல் பரப்புரைக்கு தயாராகின்றன பிரதான கட்சிகள் – தேர்தல் அறிக்கைகளும் தயாரிப்பு  

நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளதைத்  தொடர்ந்து பிரதான அரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றிப் பரப்புரைக்குத் தயாராகி வருகின்றன.

அடுத்த வாரம் முதல் பரப்புரைகள் ஆரம்பமாகும் எனவும், தேர்தல் அறிக்கைகளும் தயாரிக்கப்படும் எனவும் பிரதான கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைகள் வடக்கு, கிழக்கில் அடுத்த வாரம் தொடக்கம் ஆரம்பமாகும் என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மக்கள் சந்திப்புகளை நடத்தவுள்ளோம். அதேவேளை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடிப் பேசி தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளை முன்னெடுக்கவுள்ளனர்” எனவும் அவர் மேலும் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி

நாட்டின் சகல இடங்களிலும் அடுத்த வாரம் முதல் மக்கள் சந்திப்புகளுடன் பரப்புரைகளை ஆரம்பிக்கவுள்ளோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

“காத்திரமான தேர்தல் அறிக்கையை நாம் தயாரிக்கவுள்ளோம். மூவின மக்களின் நலன் கருதியதாக அந்த அறிக்கை இருக்கும்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசிய கட்சியின் பரப்புரை அடுத்த வாரம் ஆரம்பமாகும் என்று அதன் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

“சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி எங்கள் பரப்புரை நடவடிக்கைகள் அமைந்திருக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அறிக்கை எதிர்வரும் நாட்களில் உருவாக்கப்படும் எனவும், கூடிய விரைவில் அது வெளியாகும் எனவும் அவர் கூறினார்.

“அரச ஊடகங்கள் மற்றும் ஏனைய அலைவரிசைகளைப் பயன்படுத்தி தேர்தல் பரப்புரையை மேற்கொள்வதற்கான சாதகமான நிலை ஆளும் கட்சிக்குக் காணப்படுகின்றது” எனத் தெரிவித்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சி மக்களை வெற்றிகரமாகச் சென்றடைவதற்காக ஏனைய ஊடக வழிமுறைகளை பயன்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி

“தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் காலம் தாழ்த்தாது நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியைஅறிவித்தமைக்காக நன்றி தெரிவிக்கின்றோம். எமது பரப்புரைகள் அடுத்த வாரம் ஆரம்பமாகும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் சேனக டி சில்வா தெரிவித்தார்.

கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பும் அடுத்த வாரம் நிறைவுக்கு வந்துவிடும் எனவும் அவர் மேலும் கூறினார்.

ஜே.வி.பி.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட தேர்தல் அறிக்கையைத் தொடர்ந்தும் பின்பற்றப்போவதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

தேர்தல் பரப்புரை அடுத்த வாரம் தொடக்கம் ஆரம்பமாகும் எனவும்  ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.