சஜித் இன்று நடுவீதியில் சகாக்கள் மூவர் விலகல் தேர்தலின் பின் பலர் மொட்டுவுடன் இணைவர் என்கின்றார் சேமசிங்க

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் போன்று அரசியலில் முன்னேறலாம் என்ற நோக்கத்திலேயே   முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமாஸ ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினார். ஆனால், இவரது நோக்கம் இன்று தோல்வியடைந்துள்ளது. அவர் இன்று நடுவீதிக்கு வரவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.”

– இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

“பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைவார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொதுஜன பெரமுனவை ஸ்தாபித்தோம். அரசியல் ரீதியில் எமது நோக்கங்கள் ஒருமித்ததாகக் காணப்பட்டது.  இதன் காரணமாகவே மக்கள் மீண்டும்  ஆட்சி அதிகாரத்தை எம்மிடம் ஒப்படைத்தார்கள்.

எமது வழிமுறையைப் பின்பற்றியே  முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  ஐக்கிய  மக்கள் சக்தியை  உருவாக்கினார். ஐக்கிய தேசியக் கட்சியின்  வீழ்ச்சிக்கு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பொறுப்புக்கூற வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஒன்றும் தற்போது பலம் பெறவில்லை.   ஐக்கிய மக்கள்  சக்தி சார்பில்  பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு  வேட்புமனுத் தாக்கல் செய்த சஜித்தின் சகாக்கள் மூவர் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து  சுயமாகவே விலகியுள்ளனர்.

முன்னாள்  நிதி அமைச்சர் மங்கள சமரவீர பொதுத்தேர்தலில் இருந்து போட்டியிடுவதில் இருந்து விலகிக்கொண்டுள்ளார்.  இவரது தீர்மானத்தின் பின்னணியில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  உள்ளார் என்ற  விடயம்  அனைவரும் அறிந்ததே. பொதுத்தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இவருக்கு முக்கிய பதவி வழங்கப்படும்.

பொதுத்தேர்தலில்  ஆளும் தரப்புடன் போட்டியிடுவதற்குப் பலமான எதிர்க்கட்சி ஒன்று தற்போது கிடையாது. மூன்றில் இரண்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று எம்மால் பலமான அரசை அமைக்க முடியும்.  என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.