அரசாங்கத்தை சார்ந்திருந்தவர்களே இப்போது சூரியனை வாடகைக்கு எடுத்துள்ளனர்- துரைராஜசிங்கம்

முற்றுமுழுதாக அரசாங்கத்தை சார்ந்திருந்தவர்களே இப்போது சூரியனை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மட்டக்களப்பில் தேர்தலில் களமிறங்கியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரப் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் பிரசாரப் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் ஆகியவற்றுக்கு இன்று (சனிக்கிழமை) காலை விஜயம்செய்த வேட்பாளர் கி.துரைராஜசிங்கம், மதத் தலைவர்களிடம் ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் குறித்தும் மதத் தலைவர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் சிவம்பாக்கியாதன் உட்பட ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கி.துரைராஜசிங்கம், “எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொடர்பான பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாதிரி தேர்தல் ஒன்றை தேர்தல் ஆணையகம் நடத்தி அது தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தநிலையில் வேட்பாளர்களுக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டு அவர்கள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். தேர்தலுக்கு மக்களைத் தயார்படுத்துதல் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

சரியானதொரு தெளிவு இல்லாத சூழ்நிலையில் தான் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. முற்றுமுழுதாக ஒரு புதிய அனுபவத்தை இலங்கையிலே வாக்காளர்களுடன் வேட்பாளர்களும் சந்திக்கவிருக்கின்றோம்.

இதேவேளை, மட்டக்களப்பிலே தற்போது இருக்கின்ற தேர்தல் களமானது முன்பிருந்த நிலைமைகளைவிட வித்தியாசமானதாகவே இருக்கின்றது.

மட்டக்களப்பிலே அரசாங்க சார்பிலே மொட்டு, படகு, சூரியன் (சின்னங்கள்) என போட்டியிடுகின்றார்கள். சூரியன் என்பது எங்களுடையது. அது, தேர்தல் காலங்களில் வாடகைக்கு விடப்படுகின்றது. அவ்வாறுதான் இப்போதும் வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றது.

முற்றுமுழுதாக அரசாங்கத்தை சார்ந்திருந்தவர்கள்தான் இப்போது சூரியனை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலே களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஒட்டுமொத்தமாக இவர்கள் அனைவரும் அரசு சார்பானவர்களாகவே இருக்கின்றனர். அரசாங்கம் தொடர்ச்சியாக இந்த நாட்டை சிங்கள பௌத்த மயமாக்க நினைக்கின்றது.

ஆகவே தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றுதிரண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு உரித்தான நான்கு ஆசனங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது” என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.