மலையக மக்கள் யானைக்கே வாக்களிப்பார்கள் என்ற யுகம் மாறிவிட்டது- இராதாகிருஷ்ணன்

மலையக மக்கள் யானைக்கே வாக்களிப்பார்களென சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த யுகம்  தற்போது மாறிவிட்டதென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் காசல்ரீ விருந்தகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் முற்போக்கு கூட்டணி உதயமாகிய பின்னரே மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது.

மேலும் அமைச்சுப் பதவிகளை வகித்து அரசாங்கத்துடன் இருந்தவர்களால் கூட செய்ய முடியாமல்போன பல விடயங்களை எமது கூட்டணி செய்து முடித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு,  நாம் ஆட்சியில் இருந்தே தேர்தலை சந்தித்தோம். தற்போது சூழ்நிலை மாறியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரசாரத்துக்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, உரிய வகையில் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

நாம் தற்போது யானை கூட்டணியில் இல்லை. இருந்தும் மலையக மக்கள் யானைக்கே வாக்களிப்பார்கள் என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த யுகம் மலையேறிவிட்டது.

கடந்த காலங்களில் எமது மக்கள் அன்னத்துக்கு வாக்களிக்கவில்லையா? எமது மக்கள் யானையை மறந்து விட்டனர். தொலைபேசி சின்னத்திலேயே நாம் போட்டியிடுகின்றோம்.

ஜனாதிபதி தேர்தலில், ரணில் அணியினர் ஒழுங்காக செயற்பட்டிருந்தால் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருப்பார். இழுபறி நிலை தொடர்ந்ததாலேயே வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஒப்புதலுடனேயே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.

எனினும், மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான சூழ்நிலை எமக்கு உருவாகியுள்ளது. அதில் மலையக மக்களின் பங்களிப்பும் மிக முக்கியம். எனவே, வாய்ப்பை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.