நவீனை தொழிற்சங்கத் தலைவராக நியமித்து ரணில், தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார்- மனோ

நவீன் திசாநாயக்கவை தொழிற்சங்கத் தலைவராக நியமித்து ரணில் விக்ரமசிங்க தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார் என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாமும் பங்களித்து உருவாக்கிய நல்லாட்சியில் பெருந்தோட்டதுறை அமைச்சராக இருந்து, தமிழ் தோட்டத்தொழிலாளரின் ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரத்தில், பெருந்தடையாக இருந்து துரோகம் செய்தவர் நவீன் திசாநாயக்க எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவீன் திசாநாயக்கவை தொழிற்சங்கத் தலைவராக நியமித்தமை குறித்து மனோ கணேசன்  தனது முகப்புத்தக பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

“யூ.என்.பி.யின் கட்சி நியமனங்கள் எங்களுக்கு தேவையற்ற விடயம். அதையிட்டு அக்கறை கொள்ள எங்களுக்கு நேரமும் கிடையாது.

ஆனால், முன்னாள் பிரதமர் ரணிலுக்கு ஆட்சியமைக்க அதிகம் வாக்களித்தது தமிழ் மக்கள் என்பதை அவர் மறக்கக் கூடாது. அதிலும் அதிகபட்ச வாக்குகளைத் தந்த மாவட்டம், நுவரெலியா மாவட்டம் என்பதையும் அவர் மறக்கக் கூடாது. அவர் மறந்தாலும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நவீன் திசாநாயக்க மறக்கக் கூடாது.

பெருந்தோட்டத் துறை அமைச்சராக இருந்து, தோட்டக் கம்பனிகளின் ஏஜண்டாகச் செயற்பட்டு, தமிழ் தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில், பெருந்தடையாக இருந்து துரோகம் செய்தவர் இந்த நவீன் என்பது நாடறிந்த விடயம்.

இதுமட்டுமல்ல. தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடமைப்பதற்கு காணி தருவதிலும் நவீன் திசாநாயக்க பெரும் தடைகளை ஏற்படுத்தினார். அரசாங்கத்துக்குள் சண்டையிட்டே இந்தக் காணிகளை நாம் பெற்று வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்தோம்.

இந்நிலையில், இந்த நவீன் திசாநாயக்க எவருக்கு துரோகம் செய்தாரோ, அதே தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத் தலைவராக வெட்கமில்லாமல், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

இதன்மூலம், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் மக்களை முட்டாளாக்க நினைக்கிறார். இது நடக்காது. நடப்பது என்னவோ, தமிழ் மக்களிடம் தனக்கு எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும், ரணில் விகிரமசிங்க முற்றாக இழக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.