ராஜபக்ச ஆட்சியில் நீதிக்கு இடமில்லை – தேர்தலில் பாடம் புகட்ட வேண்டுமென கடுமையாகச் சாடுகின்றார் ரணில்

“ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியில் நாட்டு மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தையும், நீதியையும் எதிர்பார்க்க முடியாது. மனிதாபிமானமும், மனச்சாட்சியும் இல்லாத இந்த அரசிடம் இருந்து எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழும்பியுள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட் அந்நாட்டுப் பொலிஸாரால் முழங்காலினால் கழுத்து நசுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து உலகின் பல பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் வெளியிடும் வகையில் முன்னிலை சோசலிசக் கட்சியால் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோது அதில் கலந்துகொண்டவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலும் நடத்தப்பட்டது. இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த ஆட்சியில் நீதி கோரி கருத்துக்களை வெளியிடுவோருக்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவோருக்கும் இரத்தமும் சிறையும்தான் பரிசாகக் கிடைக்கும்.

அமெரிக்காவில் நடந்த படுகொலைக்கு நீதி கோரியே கொள்ளுப்பிட்டியில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதற்குக்கூட சுதந்திரத்தை வழங்க முடியாத இந்த அரசு, தங்கள் ஆட்சியில் இடம்பெற்ற – இடம்பெற்றுக்கொண்டிருக்க அராஜகங்களுக்கு நீதியை வழங்கும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

தமது அரசியல் நிகழ்ச்சி நிரலின்படி செயற்படாதவர்களை அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்துவதும், எந்த விடத்துக்கு என்றாலும் நீதி கோரி ஆப்பாட்டங்களை மக்கள் நடத்தினால் பொலிஸாரையும் இராணுவத்தினரையும் ஏவிவிட்டு அவர்களைத் தாக்குவதும் கைதுசெய்வதும்தான் இந்த அரசின் வழக்கமான செயற்பாடுகளாகும்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் இந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கேற்ற மாதிரி மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.