கொள்ளுப்பிட்டி சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம்! – மஹிந்த வேண்டுகோள்

“நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் சுகாதார விதிமுறைகளையும் மீறியே கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அரசியல் கட்சி ஒன்றின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைப் பொலிஸார் தடுக்க முயன்றபோதுதான் அவர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. தற்போதைய தேர்தல் காலத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிக்க வேண்டாம் என்று எதிரணியிடம் நாம் வேண்டிக்கொள்கின்றோம்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட் அந்நாட்டுப் பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக கொழும்பு – கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது பொலிஸார் மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். இதைக் கண்டித்து எதிரணி அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் மஹிந்த மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதலை நாம் நியாயப்படுத்தவில்லை. அதற்கு எதிரான கண்டனங்கள் அமைச்சரவைக் கூட்டத்திலும் முன்வைக்கப்பட்டன. ஆனால், நீதிமன்றத்தின் தடையுத்தரவு இருக்கின்றபோது அந்த உத்தரவையும் சுகாதார விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை தவறாகும். இதை உணர்ந்துகொண்டும் உணராத வகையில் எதிரணியினர் கருத்துக்களை வெளியிடுவது கவலையளிக்கின்றது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்