கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்தாலும் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – தேர்தல்கள் ஆணையாளர்

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸின் பரவல் ஏற்பட்டாலும் பொதுத்தேர்தல் நிச்சயம் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காணப்படும் பகுதிகளில் விசேட வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதன் மூலம் வாக்களிப்பு இடம்பெறும்  என்றும் இது குறித்து சுகாதார அதிகாரிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பதற்கு பதில் அதனை நடத்துவதற்கான அவசர சூழ்நிலை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பரவினால் முடக்கப்பட்டுள்ள பகுதிக்குள் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கும் அல்லது அந்த பகுதிக்கு வெளியே அமைப்பதற்கும் திட்டங்கள் உள்ளன என தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிட்ட பகுதிக்கு வெளியே வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டால் போக்குவரத்து வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் கீழ் வாக்களிப்பு நிலையங்களை மாற்றுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரமுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்களிப்பை உறுதி செய்வதற்காக தனிமைப்படுத்தல் நிலையங்களில் வாக்களிப்பு நிலையங்களை உருவாக்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்