அனைத்து கட்சிகளுக்கும் சமமான ஒரு தேர்தலாக அமையவேண்டும் – ரிஷாட்

எதிர்வரும் தேர்தல் ஆளுங்கட்சிக்கு மாத்திரமன்றி, அனைத்து கட்சிகளுக்கும் சமமான ஒரு தேர்தலாக அமையவேண்டும்  என்று முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடையில் வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தேர்தல் தொடர்பாக சரியான தகவல்களை தேர்தல் திணைக்களம் மக்களுக்கு இன்னும் வழங்கவில்லை. அனைவருக்கும் சமமான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கவேண்டிய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முன்னெடுக்கவேண்டும்.

அனைத்து கட்சிகளுக்கும் சமமான முறையில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கும் அவர்களது, கருத்துக்களை தெரிவிப்பதற்குமான சந்தர்ப்பத்தை தேர்தல் திணைக்களம் முன்னெடுக்க வேண்டும்.

இந்த தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் ஆளுங்கட்சி மாத்திரம் அதிக ஆசனங்களை எடுப்பதற்கான தேர்தலாக இல்லாமல் எதிர்க்கட்சிக்கும் சமநிலையை  வழங்க வேண்டும். சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைவர் என்ற வைகயில் நாம் எதிர்பார்ப்பது நேர்மைத்தன்மையும் உண்மைத்தன்மையையுமே. இந்த ஆணையம் அதனை செய்யும் என்று நாம் எதிர்பார்கின்றோம்.

இதேவேளை, தேர்தலைவிட எமது மக்கள் முக்கியம். அவர்களுடைய பாதுகாப்பு முக்கியம். சுயாதீன ஆணைக்குழு என்ற அடிப்படையில் தேர்தல் நடத்துவதிலே அவர்களுக்கு இருக்கும் அக்கறையைவிட மக்களின் உயிரை பாதுகாக்கவேண்டிய தேவை தேர்தல் திணைக்களத்திற்கு இருக்கின்றது.

அத்துடன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து ஆளுங்கட்சியினை சேர்ந்தவர்கள் அரசாங்க வளத்தினையும் அரச பலத்தையும் பயன்படுத்தி தேர்தல் நடவடிக்கையை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களிற்கு ஒரு சட்டமும் எதிர்தரப்பிற்கு ஒரு சட்டமும்தான் நாட்டில் இருந்துகொண்டிருக்கின்றது. எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு இருக்கின்றது” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.