அநுராதபுரத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் வைரஸ் தொற்று!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணொருவருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார்.

அனுராதபுரம் கெபிதிகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு மீண்டும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பெண் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹோமாகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

பின்னர் வைரஸிலிருந்து குணமடைந்த அவர், கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், மீண்டும் சுகயீனம் ஏற்பட்டுள்ளதால் நேற்று முன்தினம் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.