தேர்தல் காலத்தில் மட்டும் புலிகளின் புகழ்பாடுவது கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம்- ஐங்கரநேசன்

விடுதலைப் புலிகள் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் போராட்ட அடையாளம். அத்தகையவர்களை தேர்தல் காலம் நெருங்கியவுடன் புகழ்பாட சில தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ளனரென நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரான பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம்- வலிகாமம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாவீரர்கள் எந்நாளும் போற்றுதற்குரியவர்கள். ஆனால், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்ட அரசியல்வாதிகளும், விடுதலைப்புலிகளும் யுத்தக் குற்றம் இழைத்தார்கள் என்று சொல்லிச் சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்தைப் பிணை எடுத்த அரசியல்வாதிகளும், விடுதலைப்புலிகளை அரச படைகளுடன் இணைந்து தேடித்தேடி வேட்டையாடிய அரசியல்வாதிகளும் இன்று தேர்தல் வந்ததும் புலிகளின் புகழ்பாட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இவ்வாறு தேர்தல் காலத்தில் மட்டும் விடுதலைப்புலிகளின் புகழ்பாடுவது கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனமாகும்.

அதாவது தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கு விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் இன்று புலிவேடம் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

நான் மாகாண சபையில் பதவி வகித்த காலப்பகுதியில், ஒவ்வொரு மாவீரர் தினத்தின்போதும் மாகாணசபையின் மிகமுக்கிய பொறுப்பில் இருந்த ஒரு தலைவரை அணுகித் துயிலும் இல்லத்துக்கு வருமாறு கேட்டிருக்கிறேன்.  ஆனால் அவர் ஒவ்வொரு தடவையும் மறுத்திருக்கிறார்.

ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாத அவர், துயிலுமில்லத்தில் கால் வைக்க விரும்பவில்லை. ஆனால், இன்று தமிழ் மக்களின் வாக்குகளைக் குறிவைத்துத் தம்பி பிரபாகரன் என்று உருகி உருகிப் பேசுகிறார்.

ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு தசாப்த காலத்துக்குள் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களும், இரண்டு உள்ளூராட்சிசபைத் தேர்தல்களும், ஒரு மாகாண சபைத் தேர்தலும் நடைபெற்று முடிந்திருக்கின்றன.

இந்த தேர்தல்களில் தங்களை ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியம் பேசுகின்ற பெரிய கட்சிகளுடன் போராளிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தபோதும் அது சாத்தியமாகவில்லை. எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்குமோ தெரியாது என்று சொல்லி அவர்களை அரவணைக்க மறுத்தவர்கள், இப்போது போராளிகளை அரசியல் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் போராளிகளின் தியாகத்தைத் தங்களது அரசியல் இருப்புக்கான மூலதனமாக ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் எந்தச்சந்தர்ப்பத்திலும் அவ்வாறு நடந்துகொள்ளாது.

விடுதலைப் போராளிகள் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காகப் போராடியவர்கள். அவர்களின் இலட்சியங்கள் நிறைவேற உழைப்பதுதான் எமது குறிக்கோளாக இருக்கவேண்டுமேயில்லாமல், அவர்களின் தியாகங்களில் எங்களை வளப்படுத்துபவர்களாக இருக்கமுடியாது. இதனைத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர்கள், வேட்பாளர்கள் யாவரும் நினைவில் இருத்தியவாறே தேர்தல் காலக் களப்பணிகளை ஆற்றவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்