கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு என்ன செய்ததென பதிலளிக்கின்றார் சிறிநேசன்

தமிழ் தேசிய கூட்டமைப்பானது சுமார் 70ஆண்டுகளாக தமிழ் மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகளை கையாழ்வது மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கைப்பிரச்சினை அபிவிருத்தி சம்மந்தமான பிரச்சினைகளையும் தங்களுடைய கருத்தில் எடுத்துக்கொண்டு செயற்பட்டு வருகின்றதென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாம் இயன்றவரைக்கும் அரசுடன் தேவையற்ற முறையில் முட்டிக்கொள்ளாமல், மோதிக்கொள்ளாமல் மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை அரசுக்கு தெளிவுபடுத்தி மக்களுக்கு பெற்றுக்கொடுக்ககூடிய இராஜதந்திரப்பலமும் அனுபவப்பலமும் எங்களிடமுள்ளது. அதை நாம் செய்வோம்.

அதேவேளை எங்களின் அரசியல் உரிமைப்பிரச்சினை என்பதை நாம் விட்டுவிட முடியாது. அது எங்களின் இருப்பிற்குரிய ஆணிவேராகவுள்ளது எனவே அவ்விடயத்தை நாம் கையாண்டு செல்லவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்ற குற்றச்சாட்டை சிலர் முன்வைக்கின்றனர். தமிழர்களுக்கு என்றொரு கலாச்சாரம் உள்ளது. ஒரு மொழி உள்ளது. ஒரு சரித்திரபூர்வமான வாழ்விடம் உள்ளது என்பதை இன்றும் குலையாமல் பேணி வருகின்ற ஒருகட்சி இந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு.

தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட முதிர்ச்சிபெற்ற கட்சியாகவுள்ளதால் வன்முறைகளைத்தவிர்த்து ஜனநாயக அகிம்சைப்பாதையில் சென்றுகொண்டிருக்கின்றோம். குறிப்பாக அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் கவனம் செலுத்தியுள்ளோம் எமது நாடாளுமன்ற ஆட்சிக்காலத்தில் வீடமைப்பு அதிகார சபையினூடாக அம்பாந்தோட்டைக்கு அடுத்தபடியாக அதிகளவலான வீடுகளை, மட்டக்களப்பு மாவட்டத்திற்குத்தான் அமைச்சர்கள் மூலமாக கொண்டு வந்துள்ளோம்.

அதனைவிட கிராம எழுச்சி திட்டம், ரண்மாவத் திட்டம், குடிநீர் திட்டம், வீதி அபிவிருத்தி திட்டம் உட்பட பல அபிவிருத்தி திட்டங்களை ஆயிரக்கணக்கான மில்லியன் ரூபாய் செலவில் செய்துள்ளோம்.

நாம் இருக்கும் காலத்தில் பல்வேறுபட்ட நெருக்குவாரம் இருந்தாலும் கூட அதிக செயற்பாடுகளை செய்துள்ளோம். குறிப்பாக அரசியல் தீர்வு என்ற விடயத்தில் நாம் கணிசமான தூரம் பயணித்துள்ளோம். அந்த அடிப்பையில் அரசியல் யாப்பு விடயத்தில் அதிக பங்களிப்பை ஆற்றியிருந்தோம். 83 கூட்டங்களை கூட்டி ஒரு அரசியல் நகல் திருத்தத்தினை உருவாக்கியிருந்தோம். அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு இருந்தோம்.

நாடாளுமன்றத்தில் இந்த பொதுஜனபெரமுன கட்சியானது அரசியல் யாப்பு விடயத்தில் குழப்பியடித்தது மாத்திரமில்லாமல் அரசியல் யாப்பு வந்திருந்தால் ஒரு தனி நாடு உருவாகும் என்ற அடிப்படையில் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அந்த அரசியல் யாப்பு வருகினற ஒரு சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்தார்கள்.

அதே கட்சியைச் சார்ந்தவர்கள்தான் இன்று அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை என்கின்றனர். அரசியல் யாப்பு வருவதைத் தடுத்தவர்களும் அவர்கள்தான் அதை தடுத்துவிட்டு நாம் பெற்றுக்கொடுக்கவில்லை என்று பிரச்சாரம் செய்பவர்களும் அவர்கள் தான்.

தமிழ் அரசியல் கைதிகளை கொண்டு அடைத்தவர்களும் அவர்கள்தான். கைதிகளை வெளியே கொண்டு வரவில்லை என பிரச்சாரம் செய்தவர்களும் அவர்கள்தான். ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இராணுவத்தினால் ஆக்கிரமிக்க காரணமாகயிருந்தவர்கள் அவர்கள் இன்று அதனை மீட்டுக்கொடுக்கவில்லையென்று பிரச்சாரம் செய்கின்றவர்களும் அவர்கள், தாங்களே சீர்குலைவுகளை செய்துவிட்டு மற்றவர்கள் சீர்குலைத்துவிட்டார்கள் எனக்கூறுக்கின்றனர்.

காணாமல் ஆக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் மொட்டுக்கட்சி, படகுக் கட்சி சார்ந்தவர்கள். இப்போது இவர்கள்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கவில்லை என ஓலம் போடுவர்களும் அவர்களாகத்தான் இருக்கின்றனர்

தமிழ் மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளைச்செய்துவிட்டு மற்றவர்களின் தலையில் அனைத்தையும் கட்டுகின்றனர். ஆனால் ஒன்று கருதவேண்டும். 217 கைதிகளில் 130 கைதிகளை விடுதலை செய்யக்கூடிய சூழலை நாம் உருவாக்கிக் கொடுத்திருந்தோம்.

அதன் மூலமாக தற்போது 87 கைதிகள் உள்ளனர். நாம் ஒன்றுமே செய்யவில்வை என்கின்ற பிரச்சாரம் ஒரு விசமத்தனமான பிரச்சாரம். பல்லாயிரக்கணக்கான காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட அபிவிருத்திப்பணிகளும் நடைபெறுகின்றன.

தற்போது வேலை வாய்ப்புக்கள் கொடுப்பதாக போலித்தனமான பிரச்சாரம் இடம்பெறுகிறது. எனவே இளைஞர்கள் தெளிவடைய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.