கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியுமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இ.கதிர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்த பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனநாயகப் போராளிகள் கட்சி உருவாக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளை அரசியலுக்குக் கொண்டுவரவே தனித்துவமாக எமது கட்சி உருவாகியது.

ஆரம்ப காலத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவஞானம் வலியுறுத்தி வந்தார்.

அவ்வாறான நிலையில் எமது கட்சி உருவாக்கம் பெற்ற பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். இன்றுவரை எம்மை இணைத்துச் செயற்படவேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எமக்கும் முரண்பட்ட கருத்துக்கள் எவையும் இல்லை. நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியா? எம்மைப் பயன்படுத்துகின்றனரா என வெளியில் பலர் கேள்வி கேட்கின்றனர்.

எம்மை யாரும் பயன்படுத்த முடியாது. தமிழரசுக் கட்சியின் மீது நம்பிக்கையான தொடர்பினை நாம் வைத்துள்ளோம். தமிழரசுக் கட்சியலுள்ள சுமந்திரனுடன் கூட எமக்கு எவ்வித கருத்து முரண்பாடுகளும் இல்லை.

நாம் பங்காளிக் கட்சிகளாக இருந்ததில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பக்கபலமாக இருப்போம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க பல சக்திகள் செயற்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வட.கிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்.

எனவே நடைபெறவுள்ள பொதுத்தேர்தலிலும் நாம் வட.கிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை வெற்றியடையச் செய்யவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் ஊடாகவே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். நாம் ஒவ்வொரு பிரிவுகளாக பிரிந்து நின்று எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது.

ஆரம்ப காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தியது தவறு அவர்கள் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுப்பதால் எம்மால் பேசமுடியவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். இப்போது அந்த நிலைமாறி பேசுவதில் பயனில்லை போராடவேண்டும் என்கிறார்கள்.

நாம் ஆயுதம் ஏந்தியது அரசியல் தந்துரோபாயமே. எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தலில் பல அணிகளாக பூதங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மணல் கொள்ளையர்கள், கிறீஸ் பூதங்கள், பெண்களை சீரழித்த குழுக்கள் இன்று மக்கள் முன்னிலையில் வாக்குக் கேட்கத் தெடங்கியுள்ளனர்.

எனவே நாம் தாயகத்தில் பாதுகாப்பாக சுதந்திரமாக இருக்க ஒரே வழி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதே ஆகும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.