காட்டாட்சி மீண்டும் இங்கு தலைதூக்க இடமளியாதீர்! தேர்தலில் நல்ல பதிலை வழங்குமாறு மக்களிடம் கிரியெல்ல வேண்டுகோள்

 

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாடு கட்டுப்பாட்டை இழந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது. 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட காட்டாட்சி மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதற்குத் தேர்தலில் மக்கள் சிறந்த பதிலை வழங்க வேண்டும்.”

– இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்களைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு நாட்டையும் பாதுகாக்கவில்லை; மக்களையும் பாதுகாக்கவில்லை.

தற்போது கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை பற்றி வைத்திய நிபுணர்கள் கருத்துக்களைத்  தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அரசு எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்று எமக்குத் தெரியாது.

கடந்த ஜனவரி 24ஆம் திகதி விமான நிலையங்களை மூடுமாறு சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். எனினும், வேட்புமனுத் தாக்கல் செய்யும் வரை அரசு அதற்கான எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரித்துள்ளது. அரசால் நிவாரணங்கள் பற்றி பேசப்படுகின்றதே தவிர அவை வழங்கப்படுவதில்லை. மக்களிடம் காண்பிப்பதற்காக அறிக்கைகளை மாத்திரம் வெளியிடுகின்றனர். தற்போது காப்புறுதிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு  அரசு கட்டுப்பாடற்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தனிமைப்படுத்தல் சட்டம் சாதாரண மக்களுக்கும் தனவந்தர்களுக்கும் வெவ்வேறு முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தேர்தல் சட்டங்களும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. தேர்தலை நடத்துவதற்காக இல்லாமல் நடாத்தாமல் இருப்பதற்கான சட்டங்களே தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

தேர்தல் சட்டங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாட வேண்டும். அவ்வாறு எந்தக் கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்ல. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்படக் கூடும் என்று கூறுகின்றார். மறுபுறம் ஏனைய சில சுகாதார அதிகாரிகள் தேர்தலை நடத்தலாம் என்று கூறுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்காவைத் தூற்றியவர்கள் தற்போது அதனைச் சரி செய்வதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னிலை சோசலிசக் கட்சியினர் மீது பாரதூரமான தாக்குதல்களை நடத்தினர். இவற்றின் மூலம் 2015ஆம் ஆண்டுக்கு  முன்னர் காணப்பட்ட காட்டாட்சி மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதற்குப் பொதுத் தேர்தலில் மக்கள் சிறந்த பதிலை வழங்க வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.