கோட்டா அரசுக்குக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்கவே முடியாது – இப்படிக் கூறுகின்றார் தயாசிறி


“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் பிரயோகிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுத்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கான  தீர்வு குறித்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த வேண்டிய தேவை கிடையாது. அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 12 உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு  நியமிக்கப்பட்டுள்ளது. ஆகவே, புதிய அரசில் தமிழ் மக்களுக்கான தீர்வு எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் வழங்கப்படும்.

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜனாதிபதியுடன் பேச்சை முன்னெடுக்க வேண்டிய தேவை கிடையாது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.