சஜித்தைவிட்டு பிரிந்து செல்வதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை – மனோ கணேசன்

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவை விட்டு பிரிந்து செல்வதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

‘மனோ கணேசன், சஜித்தை விட்டு விலகி செல்கிறார்’ என்ற செய்தி சிங்கள ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளதாக தனது முகப்பத்தகத்தில் பதிவிட்டுள்ள மனோ, அது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய தேசிய கூட்டணியில் இணையும்போது அல்லது விலகும்போதுகூட, ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என ஒரேயொரு விடயத்தை மாத்திரம் காரணமாக வைத்துகொண்டு,  நான் இணைவதும் இல்லை. பிரிவதும் இல்லை. நாம் மிகவும் பொறுமையாக, நிதானமாகவே எங்கள் முடிவுகளை எடுக்கிறோம். வேகம் இருப்பது போல் எமக்குள் விவேகமும் இருக்கிறது.

நான் நாளுக்கு ஒரு அணி மாறிக்கொண்டு இருந்தால், சிங்கள மக்கள் எம்மை சூழ்ந்து வாழும் இந்நாட்டின் இந்த பிரதேசத்தில் எனக்கு மரியாதை இருக்காது. அதனால் நான் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுக்கும் மரியாதை இருக்காது. தேர்தலை எதிர்நோக்கும் இவ்வேளையில், இவர்கள் இந்த மரியாதையையே திட்டமிட்டு குழப்ப முயல்கின்றனர்.

இந்நாட்டில் செயற்படுகின்ற எந்தவொரு சிறுபான்மை கட்சி தலைவர்களையும் விடவும், எனக்கு அன்றே வந்த அமைச்சு பதவிகளையும் உதறி தள்ளிவிட்டு, ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது, அவருடன் மிகவும் பொறுமையுடன் பதினைந்து வருடங்கள் இருந்த ஒரே கூட்டு கட்சி தலைவர் நான்தான்.

இன்று எங்கள் பொறுமைக்கு முடிவு வந்து விட்டதால், நாங்கள் ஒரு கட்சியாக, கூட்டணியாக புதிய தேசிய கூட்டணியை ஸ்தாபித்து அதில் அங்கம் வகிக்கிறோம். அதன் தலைவராக சஜித் பிரேமதாச பதவி வகிக்கின்றார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது.

இன்று இந்நாட்டில் ஆளும் பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசிய கட்சியும் பார்த்து பயப்படும் அணியாக எமது ஐக்கிய மக்கள் சக்தி நிலவுகிறது. அதனாலேயே நாள்தோறும் அவதூறுகளை இந்த இரண்டு கட்சியினரும் எம்மீது எடுத்து வீசுகிறார்கள்.

நாமே உருவாக்கியுள்ள புதிய தேசிய வெற்றிக்கூட்டணியின் ஸ்தாபகர்களில் நானும் ஒரு முதன்மையாளர். இதில் இருந்து விலகும் தேவை எமக்கு இல்லை. எதிர்வரும் தேர்தலில் நாம் வெற்றி வாகை சூடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.