நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவை 10 பில்லியன்களுக்குள் மட்டுப்படுத்த முயற்சி – மஹிந்த தேசப்பிரிய

கொரோனா வைரஸ் தாக்கத்தின் சவால்களுக்கு மத்தியில் ஓகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவை 10 பில்லியன்களுக்குள் மட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் பொதுத் தேர்தலுக்கு 7 பில்லியன் முதல் 7.5 பில்லியன் ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டபோதும் தற்போது 9.5 பில்லியன் முதல் 10 பில்லியன் ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆணைக்குழு முடிந்தவரை செலவுகளைக் குறைக்க முயற்சிக்கிறது, மேலும் அதை 10 பில்லியனுக்கும் குறைவாக வைத்திருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றோம் என தெரிவித்த அவர் ஆனால் இது ஒரு கடினமான பணியாகும் என குறிப்பிட்டார்.

ஏனெனில் சுகாதார முறைகளை பின்பற்றவும் குறிப்பாக கை சுத்திகரிப்பு மற்றும் தேர்தல் ஒத்திகை என்பனவற்றினை மேற்கொள்ள வேண்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

மேலும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் 90 முழுநேர அதிகாரிகள் மற்றும் 60 பகுதிநேர அதிகாரிகள் உள்ளனர். அவர்களுக்கு தினமும் அறுவை சிகிச்சை முக்கவசங்கள் தேவை எனவே ஒவ்வொரு அதிகாரிக்கும் இரண்டு முக்கவசங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதோடு சுத்திகரிப்பு கருவிகளும் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல்களை அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடனும் நடத்துவதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பு என்றும் தேர்தல் காரணமாக நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.