வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் தடுமாறுகின்றது – ரஞ்சித் மத்தும பண்டார

அனைத்து தரப்புகளையும் பகைத்துக்கொண்டு, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இந்த அரசாங்கம் பலவீனமாக செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொத்மலையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , “கூட்டணியொன்றை அமைக்கவும், பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்கவும், அவருக்கு தேவையான செயலாளர் ஒருவரை நியமிக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவே ஒப்புதல் வழங்கியது.

ரணில் விக்கிரமசிங்க வழங்கிய கடிதமும் இருக்கின்றது. எனவே, நாம் தவறிழைக்கவில்லை. எம்மை நீக்கி ரணில் தரப்பே தவறிழைத்துள்ளது. இதற்கு எதிராக நீதிமன்றம் சென்றோம். 20 ஆம் திகதி தீர்ப்பு வரும்.

ஐக்கிய தேசியக்கட்சி என கூறிக்கொள்ளும் தரப்பு எமக்கு பிரதிவாதி அல்ல. மொட்டு கட்சியினரே எமது பிரதிவாதி. அவர்களுடனேயே எமக்கு அரசியல் சமர் இருக்கின்றது.

நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் எமது பக்கமே இருக்கின்றனர். ரணில் தரப்பு என்பது கட்சியின் பெயரை மட்டுமே வைத்துக்கொண்டுள்ளது. கிராம மட்டத்திலும் எமக்கான ஆதரவே இருக்கின்றது.

கடந்த 6 மாதங்களில் தம்மால் முடியாது என்பதை அரசாங்கம் நிரூபித்துவிட்டது. விவசாயிகளுக்கு உரத்தை வழங்கவில்லை. அரிசிக்கு உரிய கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க முடியாமல்போனது. அரச ஊழியர்களின் சம்பளம் பறிக்கப்படுகின்றது.

ஆகமொத்தத்தில் ஏழைகளிடமிருந்து பறித்து செல்வந்தர்களுக்கு வழங்கும் வகையிலேயே அரசாங்கத்தின் வரிக்கொள்கை அமைந்துள்ளது” என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.