சமுர்த்தி கணணி உதவியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரிக்கை!

கடந்த ஏழு மாதங்களாக எதுவித கொடுப்பனவுமின்றி சேவையாற்றிவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி கணணி உதவியாளர்களின் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணணி உதவியாளர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

இதன்போது ஊர்வலமாக சென்று மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  சுதர்ஷ்னி ஸ்ரீகாந்த்திடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகளின் கடமையாற்றுவதற்கு 59 சமுர்த்தி கணணி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர்கள் மூன்று மாதங்கள் பயிற்சி வழங்கப்பட்டு நியமனத்திற்குள் உள்வாங்கப்பட்ட நிலையில் இதுவரையில் தமக்கான சம்பளம் வழங்கப்படவில்லையெனவும் அவர்கள்  தெரிவித்தனர்.

வாகரை தொடக்கம் துறைநீலாவனை வரையிலான சமுர்த்தி வங்கிகளுக்கு இந்த சமுர்த்தி கணணி உதவியாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் தாங்கள் பல கஸ்டங்களுக்கு மத்தியிலேயே தினமும் கடமைக்கு சென்றுவந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக அரசாங்க உதவிகள் வழங்கும்போது தாங்கள் அர்ப்பணிப்புமிக்க சேவையினை வழங்கிய நிலையிலும் இதுவரையில் தமது சம்பள பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாதது கவலைக்குரியது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் தமது சம்பள பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு தமது பிரச்சினையை தீர்க்க உதவுமாறும் அவர்கள் வேண்டுகோள்விடுத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.