இ.தொ.கா. கட்சிக்குள் குழப்பம் இல்லை: பொதுத் தேர்தலின் பின்னரே புதிய தலைவர்- கனகராஜ்

கட்சிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை எனவும் பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவரை தேசிய சபை நியமிக்கும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் இன்று (புதன்கிழமை) நியமிக்கப்பட்டார். அத்துடன், பொதுச்செயலாளராக செயற்பட்ட அனுஷியா சிவராஜாவுக்கு உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், “கட்சி வீரியமாக செயற்படவேண்டிய காலகட்டம் இதுவாகும். பொதுச்செயலாளர் பதவிக்கு ஜீவன் தொண்டமானை நியமிக்குமாறு கட்சியின் பல மட்டங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதற்கமையவே தேசிய சபைகூடி அந்த நியமனத்தை உறுதிப்படுத்தியது.

எங்களுடைய தலைவர் இருக்கிறார் என்ற இறுமாப்புடனேயே எமது பயணம் தொடர்கின்றது. தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவரை நியமிப்பது குறித்து தேசிய சபை முடிவெடுக்கும்.

எதிர்கால பயணத்தை தொடர்வதற்காக கட்டுக்கோப்புடன் கட்சி ஒன்றுமையாக இருக்கின்றது. எவ்வித பிரச்சினையும் கட்சிக்குள் இல்லை.

ஜீவன் தொண்டமான் தனது தந்தையின் வழியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் நீண்டகாலம் செயற்பட்டவர். அவர் ஒரு சட்டத்தரணி என்பதுடன் சிறப்பாக செயற்படுவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றிபெறுவார்கள். கண்டி, பதுளையிலும் வெற்றி உறுதி. அதற்கேற்ற வகையிலேயே வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.