கதிர்காம யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை மீள்பரிசீலனை செய்யுமாறு யோகேஸ்வரன் கோரிக்கை!

இம்முறை கிழக்கு மாகாணத்திலிருந்து காதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்து நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாழைச்சேனை பகுதியிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- “இலங்கையில் முருகப்பெருமான் குடிகொண்டு திருவருள் பாலிக்கும் முக்கிய தலமாகக் கருதப்படும் கதிர்காம முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் இந்து தமிழ் மக்களும், சிங்கள மக்களும், பாதயாத்திரையாக செல்வது பல்லாண்டு காலமாக நடாத்தப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் கதிர்காமத்திற்கு பாதயாத்திரையை கட்டாயம் செல்ல வேண்டும் என்று உறுதியுடன் இருக்கின்றார்கள். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், சுகாதார திணைக்களம் என்பவற்றுக்கு மகஜர் அனுப்பியுள்ளேன். கதிர்காமத்திற்கு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளேன்.

கதிர்காம பாதயாத்திரை தொடக்கம் முதல் கதிர்காமம் முருகன் ஆலய தரிசனம் செல்லும் வரை யாத்திரிகர்கள் சுகாதார முறையினை பேணி செல்வார்கள் என்று கூறுதி வழங்கியுள்ளனர். எனவே அரசாங்கம் கொண்டுள்ள கொள்கையை மாற்றி அனுமதி வழங்குமாறு வேண்டுகின்றேன்.

எனவே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கிழக்கில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன். எனவே கதிர்காம முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு ஆலய கொடியேற்றம் முதல் தீர்த்தம் வரை பக்தர்கள் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பெரும்பாலும் அடியார்கள் தங்களது நோக்கங்கள், துன்பங்கள்,  அவசியத் தேவைகளை வேண்டுதல் செய்து நேர்த்தி வைத்து அது நிறைவேறியதும் தமது பாதயாத்திரையை பக்தி பூர்வமாக மேற்கொள்கின்றனர். இவ்வடியார்களில் ஒருவராக முருகனும் செல்வார் என்பது நீண்டகால நம்பிக்கை ஆகும். பல அற்புதங்களும் பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு நிகழ்ந்துள்ளது.

இவ்வேளை இக்கொரோணா வைரஸ் பரவல் காரணமாக சுகாதார நிலையைப் பேணும் அவசியத்தின் நிமிர்த்தம் இம்முறை கிழக்கில் இருந்து பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உதவுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் மீண்டும் அன்பாக வேண்டுகின்றேன்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்