எழுதாரகை படகுச் சேவையை உரியமுறையில் முன்னெடுக்க நடவடிக்கை- அங்கஜன்

அனலைதீவு, எழுவைதீவு இரண்டிற்குமாக போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட எழுதாரகை சேவையை உரிய முறையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை தாம் எடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘எழுதாரகை’ சேவையில் ஈடுபடாமைக்கு அப்போதைய அரசாங்கமும் அதனுடன் இணைந்து செயற்பட்ட மக்கள் பிரதிநிதிகளுமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “அனலைதீவுப் பகுதியில் தற்போது தரித்து நிற்கும் ‘எழுதாரகை’ படகானது சேவையில் ஈடுபடாமல் உள்ளமைக்கு அப்போதைய அரசாங்கமும் அதனுடன் இணைந்து செயற்பட்ட மக்கள் பிரதிநிதிகளுமே பொறுப்புக்கூற வேண்டும்.

அப்பகுதி மக்களுக்கான போக்குவரத்துச் சேவைக்காக பெருந்தொகை நிதியில் எழுதாரகை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இவ்வாறன நிலையில்லாத அபிவிருத்திகளே கடந்த கால அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

எழுதாரகையானது, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்வகிக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதே பொருத்தமானது. இவ்விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் பேசப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதி மக்களுக்கான போக்குவரத்திற்காக எழுதாரகை சேவையினை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் மக்களுக்கான சேவை முன்னெடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.